அரையிறுதியில் இந்தியா ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
அரையிறுதியில் இந்தியா ஏமாற்றம்

புவனேஸ்வர்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதியில், ஜெர்மனியுடன் மோதிய நடப்பு சாம்பியன் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் போராடி தோற்று பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து ஆதிக்கம் செலுத்த அந்த அணி 3-0 என முன்னிலை பெற்றது. 25வது நிமிடத்தில் உத்தம் சிங் கோல் அடித்து இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுத்தார். அடுத்த சில விநாடிகளிலேயே ஜெர்மனியின் கட்டர் கோல் அடிக்க (பெனால்டி ஸ்ட்ரோக்), இடைவேளையின்போது இந்தியா 1-4 என பின்தங்கியது. கடைசி 2 கால் மணி நேர ஆட்டத்திலும் கோல் அடிக்க இந்திய வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. கடைசி நிமிடத்தில் பாபி சிங் ஆறுதல் கோல் அடிக்க, இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் தோற்று கோப்பையை தக்கவைக்கும் வாய்ப்பை இழந்தது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஜெர்மனி - அர்ஜென்டினா, வெண்கலப் பதக்கத்துக்காக (3வது இடம்) இந்தியா - பிரான்ஸ் அணிகள் நாளை மல்லுக்கட்ட உள்ளன.

மூலக்கதை