வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

தினகரன்  தினகரன்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

காலே: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 164 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 204 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்னும் எடுத்து ஆல் அவுட்டாகின. 49 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்திருந்தது.தனஞ்ஜெயா 153, எம்புல்டெனியா 25 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். எம்புல்டெனியா 39 ரன் எடுத்து ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 345 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது (121.4 ஓவர்). தனஞ்ஜெயா 155 ரன்னுடன் (262 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் பெருமாள் 3, சேஸ் 2, ஹோல்டர், பிராத்வெய்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, லசித் எம்புல்டெனியா - ரமேஷ் மெண்டிஸ் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 132 ரன்னுக்கு சுருண்டு (56.1 ஓவர்) 164 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எம்புல்டெனியா, ரமேஷ் தலா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். முதல் டெஸ்டில் 187 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தனஞ்ஜெயா டி சில்வா ஆட்ட நாயகன் விருது, ரமேஷ் மெண்டிஸ் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

மூலக்கதை