மதத்தை களங்கப்படுத்தியதாக ஆவேசம் இலங்கையை சேர்ந்தவர் பாக்.கில் எரித்து கொலை: நடுரோட்டில் அடித்து கொன்று பயங்கரம்

தினகரன்  தினகரன்
மதத்தை களங்கப்படுத்தியதாக ஆவேசம் இலங்கையை சேர்ந்தவர் பாக்.கில் எரித்து கொலை: நடுரோட்டில் அடித்து கொன்று பயங்கரம்

லாகூர்: குரானை அவமதித்ததாக கூறி பாகிஸ்தானில் ஒரு கும்பல் இலங்கையை சேர்ந்தவரை அடித்து,  எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையை சேர்ந்தவர் பிரியாந்த குமாரா (40). இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 40 கிமீ ெதாலைவில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில், தனியார் தொழிற்சாலையில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இந்த அலுவலகம் அருகே உள்ள சுவரில் டெஹ்ரிக் இ லப்பாக் பாகிஸ்தான் என்ற அமைப்பு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், குரான் வசனங்கள் இடம் பெற்று இருந்தன.இந்த போஸ்டரை குமாரா கிழித்து குப்பை தொட்டியில் வீசியதாக தெரிகிறது. இதனை அங்கிருந்த 2 தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. தொழிற்சாலையை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குமாராவை இழுத்து வந்த அவர்கள் அவரை நடுரோட்டில் அடித்து சித்ரவதை செய்தனர். இதில் அவர் உயிரிழந்த நிலையில், அந்த கும்பல் அவரை தீ வைத்து கொளுத்தியது. குமாரா சடலத்தை 100க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதோடு, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை