சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு; அகமதாபாத் அணி கைமாறுகிறதா?.. ஐபிஎல் ஆட்சி மன்ற குழு இன்று முடிவு

தினகரன்  தினகரன்
சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு; அகமதாபாத் அணி கைமாறுகிறதா?.. ஐபிஎல் ஆட்சி மன்ற குழு இன்று முடிவு

கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15வது ஐபிஎல் தொடரில், அகமதாபாத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது. அண்மையில் நடந்த ஏலத்தில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த புதிய அணிகள் வீரர்கள் பொது ஏலத்திற்கு முன் 3 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுல், ரஷித்கான் ஆகியோரிடம் பெரும் தொகைக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அகமதாபாத் அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த ஒரு வீரரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதற்கு காரணம் அந்த அணி மீது எழுந்த முக்கிய குற்றச்சாட்டு தான். ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பிசிசிஐக்கு மிகவும் நம்ப தகுந்த தகவல்கள் கிடைத்த காரணத்தால் அந்த அணி ஏலம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் பிசிசிஐயும் தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டம் கொல்கத்தாவில் இன்று கூடுகிறது. இதில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பொருளாளர் அருண் துமால், ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் அகமதாபாத் அணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 4 பேர் குழு அமைக்கப்படும். விசாரணை குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படியே அகமதாபாத் அணியை சிவிசி நிறுவனம் வைத்திருக்குமா என்பது முடிவாகும். இல்லையென்றால் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை