தென்ஆப்ரிக்க கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் பயணம் ஒரு வாரம் தள்ளிப்போகிறது?

தினகரன்  தினகரன்
தென்ஆப்ரிக்க கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் பயணம் ஒரு வாரம் தள்ளிப்போகிறது?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. வரும் 17ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரையில் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் மோத உள்ளது. இதற்காக இந்திய அணி வரும் 9ம் தேதி தென்ஆப்ரிக்கா புறப்பட திட்டமிட்டுள்ளது. ஆனால் தென்ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்த தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. இதனால் அணி வீரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.ஒமிக்ரான் காரணமாக தென்ஆப்ரிக்காவில் பல விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்திய ஏ கிரிக்கெட் அணி அங்கு தொடர்ந்து விளையாடி வருகிறது.இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கும் படி தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தை அணுக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3 டெஸ்ட்டை 2ஆக குறைக்கவும், பயோ பபூள் நடைமுறையை கடுமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியா ரத்து செய்தால் தென்ஆப்ரிக்காவுக்கு கடும் நிதி இழப்பு ஏற்படும். எனவே தொடரை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்த உடன் பிசிசிஐ இதுபற்றி முடிவு செய்யும். இதனிடையே தென்ஆப்ரிக்க தொடர் பற்றி கேப்டன் விராட் கோஹ்லி நேற்று மும்பையில் அளித்த பேட்டியில்: தென்ஆப்பிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? இதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது குறித்து பிசிசிஐயிடம் நாங்கள் பேசி வருகிறோம். ஓரிரு நாட்களில் இது தொடர்பாக தெளிவான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். தற்போதைய தொடரில் இடம் பெறாத சில வீரர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இணைந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன் பிறகு தனி விமானத்தில் பயணிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் முடிந்த அளவுக்கு தெளிவான நிலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே அணியின் அனைத்து சீனியர் வீரர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது தொடர்பாக வீரர்களிடம் விவாதிக்க தொடங்கி உள்ளார். அது மிகவும் முக்கியமானது. இப்போதைக்கு எங்களது முழு கவனமும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் மீதே உள்ளது, என்றார்.

மூலக்கதை