மயங்க் அகர்வால் சதம் * இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 03, 2021

தினமலர்  தினமலர்
மயங்க் அகர்வால் சதம் * இந்திய அணி ரன் குவிப்பு | டிசம்பர் 03, 2021

மும்பை: மும்பை டெஸ்டில் மயங்க் அகர்வால் அசத்தல் சதம் விளாச, முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 4 விக்கெட் சாய்த்தார். 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, தொடர் 0–0 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று துவங்கியது. 

மழை பாதிப்பு

முதல் நாள் இரவு பெய்த மழை காரணமாக, மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் உணவு இடைவேளை வரை போட்டி துவங்கவில்லை. பின் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். காயம் காரணமாக ரகானே, ஜடேஜா, இஷாந்த் சர்மா இடம் பெறவில்லை. ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ் அணிக்கு திரும்பினர். நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், இடது முழங்கை காயம் காரணமாக விலகிக் கொள்ள, டாம் லதாம் தலைமை ஏற்றார்.

நல்ல துவக்கம்

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஜேமிசன் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து ரன்கணக்கைத் துவக்கினார் சுப்மன். மறுபக்கம் அஜாஸ் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் மயங்க் அகர்வால். சாமர்வில்லே பந்துகளில் சிக்சர், பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை தந்தார் சுப்மன். முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, அஜாஸ் படேல் சுழலில் சுப்மன் (44) அவுட்டானார்.

திடீர் அதிர்ச்சி

அஜாஸ் வீசிய போட்டியின் 30 வது ஓவர், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதன் 2வது பந்தில் வழக்கத்திற்கு மாறாக ‘கிரீசை’ விட்டு இறங்கி வந்து விளையாட முயற்சித்த புஜாரா (0) போல்டானார். பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோஹ்லி, இதே ஓவரின் கடைசி பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ‘டக்’ அவுட்டானார். விக்கெட் இழப்பின்றி 80 ரன் எடுத்த இந்தியா, திடீரென 80/3 என்ற நிலைக்கு சென்றது.

மயங்க் சதம்

பின் மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தனர். சற்று தாக்குப்பிடித்த ஸ்ரேயாஸ் 18 ரன்னுக்கு அவுட்டானார். 119 பந்தில் 50 ரன்களை கடந்த மயங்க் அகர்வால், பின் வேகம் காட்டினார். இவர், 196 வது பந்தில் டெஸ்ட் அரங்கில் 4வது சதம் எட்டினார். 

முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (120), சகா (25) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட் சாய்த்தார். 

இன்று நமது பேட்டர்கள் அசத்தும் பட்சத்தில், வலுவான ஸ்கேரை எட்டி நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம். 

 

0

மும்பை டெஸ்டில் கோஹ்லி, 4வது பந்தில் ‘டக்’ அவுட்டானார். இந்த ஆண்டு மட்டும் சென்னை, ஆமதாபாத், நாட்டிங்காம், மும்பை என நான்கு முறை டெஸ்ட் இன்னிங்சில் ‘டக்’ அவுட்டானார். 

* டெஸ்டில் அதிக ‘டக்’ அவுட்டான கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை கிரீம் ஸ்மித்துடன் பகிர்ந்து கொண்டார் கோஹ்லி. இருவரும் தலா 10 முறை அவுட்டாகினர். முதலிடத்தில் பிளமிங் (13, நியூசி.,) உள்ளார். 

 

14

மயங்க் அகர்வால் கடைசியாக 2019ல் வங்கதேசத்திற்கு எதிரான இந்துார் டெஸ்டில் 243 ரன் எடுத்தார். பின் களமிறங்கிய 13 இன்னிங்சில் ஒரு முறை மட்டும் அதிகபட்சம் 58 ரன் எடுத்தார். ஒருவழியாக மீண்ட இவர், நேற்று சதம் அடித்து ‘பார்மிற்கு’ திரும்பினார்.

 

கோஹ்லி ‘அவுட்’ சரியா

நேற்று அஜாஸ் வீசிய பந்தை (29.6 வது) சந்தித்த கோஹ்லிக்கு, அம்பயர் அனில் சவுத்ரி ‘எல்.பி.டபிள்யு.,’ முறையில் அவுட் கொடுத்தார். கோஹ்லி ‘ரிவியு’ கேட்டார். ‘ரீப்ளேயில்’ பந்து முதலில் பேட்டில் பட்டு பின் பேடில் பட்டது போல தெரிந்தது. சந்தேகத்தின் பலன்  பேட்ஸ்மேனுக்கு செல்ல வேண்டும். ஆனால் டி.வி., அம்பயர் வீரேந்தர் சர்மா அவுட் என தெரிவிக்க, கோஹ்லி கோபம் அடைந்தார். பெவிலியன் திரும்பும் போது, பவுண்டரியில் இருந்த விளம்பர அட்டை மீது பேட்டால் அடித்து விட்டுச் சென்றார். 

இதுகுறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில்,‘‘பல முறை ‘ரீப்ளே’ பார்த்துவிட்டும் மூன்றாவது அம்பயர் தவறு செய்தது ஏமாற்றமாக உள்ளது. அம்பயர் வீரேந்தர் சர்மா முதல் டெஸ்டில் பல தவறுகள் செய்தார். இது மீண்டும் தொடர்கிறது,’’ என்றார். 

 

அஜாஸ் அசத்தல் 

புஜாரா, கோஹ்லியை ஒரே ஓவரில் அவுட்டாக்கிய இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேல், 1988ல் மும்பையில் பிறந்தவர். சிறுவயதில் நியூசிலாந்து சென்று 2012ல் முதல் தர போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2018ல் டெஸ்டில் கால்பதித்த இவர், நேற்று மும்பை டெஸ்ட் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் சாய்த்தார்.

* தவிர மும்பையில் பிறந்து இந்திய அணிக்கு எதிராக மும்பையில் விளையாடிய இரண்டாவது வீரர் ஆனார். இதற்கு முன் டக்ளஸ் ஜார்டைன் 1933ல் இங்கிலாந்து அணி கேப்டனாக விளையாடினார்.

மூலக்கதை