‘டிரா’ செய்தது இந்தியா ‘ஏ’ | டிசம்பர் 03, 2021

தினமலர்  தினமலர்
‘டிரா’ செய்தது இந்தியா ‘ஏ’ | டிசம்பர் 03, 2021

புளோம்போன்டின்: இந்தியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிகள் மோதிய 2வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் புளோம்போன்டினில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ 297, இந்தியா ‘ஏ’ 276 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 212 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

 

பின், 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ஏ’ அணிக்கு கேப்டன் பிரியம் பன்சால் (0), பிரித்வி ஷா (18) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய அபிமன்யு ஈஸ்வரன், ஹனுமா விஹாரி அரைசதம் கடந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்த போது அபிமன்யு ஈஸ்வரன் (55) அவுட்டானார்.

 

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. விஹாரி (72) அவுட்டாகாமல் இருந்தார். இவ்விரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் வரும் டிச. 6ல் புளோம்போன்டினில் துவங்குகிறது.

மூலக்கதை