அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள் உச்சம் தொட்ட ‘கிரெடிட் கார்டு’ செலவினங்கள்

தினமலர்  தினமலர்
அக்டோபரில் அதிகம் செலவழித்த மக்கள் உச்சம் தொட்ட ‘கிரெடிட் கார்டு’ செலவினங்கள்

மும்பை:கடந்த அக்டோபரில், ‘கிரெடிட் கார்டு’ வாயிலான செலவினங்கள், ௧ லட்சம் கோடி ரூபாயை முதன் முறையாக தாண்டியுள்ளது என, ரிசர்வ் வங்கி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பண்டிகை கால கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில், கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபரில் கிரெடிட் கார்டு செலவினங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது 56 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த செப்டம்பரில் 80 ஆயிரத்து, 477 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோ பரில், அதையும் விஞ்சி ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.கடந்த சில மாதங்களாகவே, கிரெடிட் கார்டு வாயிலாக செய்யப்படும் செலவுகள் அதிகரித்து வருகின்றன.

இதற்கு, பண்டிகை காலமும் ஒரு முக்கியமான காரணமாகும். நாட்டில் வேகமான பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருவதை அடுத்து, தேவைகளும் அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, செலவினங்களும் உயர்ந்துள்ளன.மேலும் வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குவதும் அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபரில் மட்டும், புதிதாக 13.3 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கிரெடிட் கார்டு வாயிலான செலவினங்கள் மட்டுமின்றி; ரொக்க செலவுகளும் இந்த பண்டிகை காலத்தில் அதிகரித்துஉள்ளன.

மூலக்கதை