‘ஏர் இந்தியா’வுக்கு வெளிநாட்டு சி.இ.ஓ., ‘டாடா சன்ஸ்’ புதிய முயற்சி

தினமலர்  தினமலர்
‘ஏர் இந்தியா’வுக்கு வெளிநாட்டு சி.இ.ஓ., ‘டாடா சன்ஸ்’ புதிய முயற்சி

புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு தகுதி வாய்ந்த, புதிய தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமிக்கும் முயற்சியில், ‘டாடா சன்ஸ்’ இறங்கி உள்ளது.
கடந்த அக்டோபரில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவது குறித்து, மத்திய அரசுடன் டாடா சன்ஸ் ஒப்பந்தம் செய்தது.ஏர் இந்தியாவை, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா சன்ஸ் வாங்கிஉள்ளது.இதையடுத்து, வரும் ஜனவரி மாதத்தில் கைமாற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமை பெற்றுவிடும் என தெரிகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியாவை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்த ஆலோசனைகளில் டாடா சன்ஸ், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக, ஏர் இந்தியாவுக்கு என தனியாக ஒரு சி.இ.ஓ., எனும் தலைமை செயல் அதிகாரியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஏர் இந்தியாவை நடத்துவதற்கான குழுவினரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைக்கவும் டாடா சன்ஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘ஏர் ஆசியா இந்தியா’ நிறுவனத்தையும், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தையும் இணைத்து, ஏர் இந்தியாவின் பட்ஜெட் விமான சேவை பிரிவாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை