ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., வசதியின் முக்கிய அம்சங்கள்

தினமலர்  தினமலர்
ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., வசதியின் முக்கிய அம்சங்கள்

வருமான வரித்துறை, ஏ.ஐ.எஸ்., எனப்படும் ஆண்டு தகவல் அறிக்கை வசதியை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. வருமான வரித்துறையின் இணையதளத்தில் அணுக கூடிய இந்த அறிக்கை, நிதியாண்டில் ஒருவர் மேற்கொண்ட அனைத்து நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை கொண்டுள்ளது.

வருமான வரி செயல்பாடுகளை மேலும் வெளிப்படையான தன்மை கொண்டதாக மாற்றும் நோக்கத்துடனும், வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

தகவல் அறிக்கை:

ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., நிதியாண்டில் ஒருவர் மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை கொண்டுள்ளது. நிதி பரிவர்த்தனை தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கும் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

விரிவான தகவல்கள்:

இந்த அறிக்கை, சம்பளம், வட்டி வருமானம் உள்ளிட்ட பல்வேறு வருமான தகவல்களை கொண்டிருப்பதோடு, மியூச்சுவல் பண்ட் ஊக்கத்தொகை, பங்கு விற்பனை லாபம் உள்ளிட்ட தகவல்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே உள்ள, ‘26 ஏஎஸ்’ படிவத்தை விட இது விரிவானது.

இரண்டு பகுதிகள்:

அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதி, பான் எண், அடையாளம் மறைக்கப்பட்ட ஆதார் எண், வரி செலுத்துபவர் பெயர் உள்ளிட்ட தகவல்களை கொண்டுள்ளது. இரண்டாம் பகுதியில் நிதி பரிவர்த்தனைகள், வரி விபரங்கள், டி.டி.எஸ்., பிடித்தம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தகவல் சுருக்கம்:

இந்த அறிக்கையை பயனாளிகள் வருமான வரித்துறை தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அறிக்கையில் உள்ள தகவல்கள் சுருக்கமாக, வரி செலுத்துபவர் தகவல் சுருக்கமாக டி.ஐ.எஸ்., அளிக்கப்படுகிறது. அறிக்கை விபரங்களை புரிந்து கொள்வதற்கான எளிய வழியாக இது அமைகிறது.

முறையீடு வசதி:

அறிக்கையில் உள்ள தகவல்களில் பிழைகள் இருந்தால், அது தொடர்பாக புகார் செய்து திருத்தம் செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தகவல் அறிக்கையை கவனமாக பார்த்து, தகவல்களை உறுதி செய்து கொள்ளுமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. திருத்தப்படும் தகவல்கள் நிகழ்நேரத்தில் சேர்க்கப்படும்.

மூலக்கதை