ஆயிரம் சந்தேகங்கள் :வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., பாதுகாப்பாக இருக்குமா?

தினமலர்  தினமலர்
ஆயிரம் சந்தேகங்கள் :வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., பாதுகாப்பாக இருக்குமா?

சம்பளம் வருவதற்கு முன்னரே, அதை பயன்படுத்துவதற்கு பல செயலிகள் வந்துள்ளனவே?
எஸ்.சபரீஷ், புரசைவாக்கம்.
மாதக் கடைசியில் அதாவது 20ம் தேதிக்குப் பின், பல வீடுகளில் செலவு கையை கடிக்க துவங்கும். அண்டை, அயலாரிடம் கைமாத்து வாங்குவதோ, கிரெடிட் கார்டை பயன்படுத்துவதோ ஆரம்பிக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கவே, ஈட்டிய ஊதியத்தை பணியாளர்கள் பெறும் ‘எர்ண்டு வேஜ் ஆக்சஸ்’ நடைமுறையை ஒருசில நிறுவனங்கள் அளித்துள்ளன. இதற்குத் தான் பல மொபைல் செயலிகள் வந்துள்ளன.
நம் ஊரில் ஏற்கனவே தினக்கூலி, வாரக்கூலி என்று கேள்வி பட்டிருப்போம். அதுபோல், வேலைக்குப் போய்விட்டு வந்தால், அன்றைய ஊதியம், பணியாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். அதை, அவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். வழக்கம்போல், இதில் நல்லது அல்லது இரண்டும் சேர்ந்தே உள்ளது. பணியாளர்களை இவை மேன்மேலும் கடன்காரர்கள் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் மட்டும் எனக்கு உண்டு.
நான் எல்.ஐ.சி.,யில் பணம் செலுத்தி, பாலிசி முதிர்வு அடைந்துவிட்டது. ஆனால் பேசிக் தொகையும், போனசும் குறைவாக உள்ளது. நான் யாரை அணுக வேண்டும்?
மலர் கோவிந்தராஜன், வாட்ஸ் ஆப்.
எந்த எல்.ஐ.சி., கிளையில் பாலிசி போட்டீர்களோ, அந்தக் கிளை பொறுப்பாளரை அணுகவும். வாடிக்கையாளர் குறைதீர் அதிகாரி அவர் தான். பெரும்பாலும் இந்த மட்டத்திலேயே உங்களுக்கான பதில் கிடைத்துவிடும். தேவைப்பட்டால், மேலே வட்டார அல்லது ஜோனல் மட்ட அதிகாரியையும் பார்க்கலாம்.
வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., விபரங்கள் பாதுகாப்பாக இருக்குமா?
எஸ்.பி.ராஜசேகர், மின்னஞ்சல்.
வங்கி அல்லது இதர நிதி நிறுவனங்கள் தரப்பில் பெறப்படும் வாடிக்கையாளர் தகவல்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளன. ஆனால், வாடிக்கையாளரை ஏமாற்றி, விபரங்களைத் திருடும் ‘கே.ஒய்.சி., மோசடி’ அதிகமாக இருக்கிறது. கே.ஒய்.சி., விபரங்களை அப்டேட் செய்யுங்கள் என்று ஒரு ‘சுட்டி’ அனுப்பப்பட்டு, அதன் வாயிலாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு, வங்கியில் உள்ள தொகை அனைத்தும் திருடப்படுகிறது. இத்தகைய திருட்டு நடப்பதை எஸ்.பி.ஐ., வங்கி வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, மூன்று பாதுகாப்பு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது. ஒன்று, எந்தச் சுட்டியை அழுத்துவதற்கு முன்பும் யோசியுங்கள். இரண்டு கே.ஒய்.சி., விபரங்களை அப்டேட் செய்ய, வங்கி தரப்பில் இருந்து சுட்டி அனுப்பப்படுவதில்லை. மூன்று, யாரிடமும் உங்கள் மொபைல் எண்ணையோ, இதர ரகசிய தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது. கே.ஒய்.சி., விபரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில், வங்கியை விட நீங்கள் தான் இன்னும் உஷாராக இருக்க வேண்டும்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், ‘தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனில்’ என் ஓய்வுதிய பணத்தை முதலீடு செய்துள்ளேன். சமீபத்தில் ஒரு ‘வாட்ஸ் ஆப் வீடியோ’வில், அதில் முதலீடு செய்வதில் ‘ரிஸ்க்’ உள்ளதாக வந்தது. உண்மை நிலவரம் என்ன?
வள்ளி சுப்ரமணியம், சென்னை.
நானும் அந்த வீடியோவை பார்த்தேன். அதில், இரண்டு ரிஸ்க்குகள் பிரதானமாக குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு கடன் கொடுக்கவில்லை. மாறாக, ‘டான்ஜெட்கோ’ என்ற மின் வினியோக தனி நிறுவனத்துக்கு வழங்குகிறது. பரவலாக பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கினால், ஒரு நிறுவனம் சிரமப்பட்டாலும், இன்னொரு நிறுவனம் அதை ஈடுகட்டிவிடும். மாறாக, ஒரே நிறுவனத்துக்கு கடன் வழங்குவதால், முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்பதை யோசிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்படுகிறது.
இரண்டாவதாக, டான்ஜெட்கோ போன்ற நிறுவனங்களுக்கு எதிராக, திவால் சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி இருப்பதால், அங்கே ஓர் இடர் எப்போதும் இருக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தைப் பற்றிய கூடுதல் விபரங்களைத் தந்து, இடர்களைப் புரிய வைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் வீடியோ அது. அதற்காக பயப்பட வேண்டாம். இப்போதும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் பின்னால் இருப்பது தமிழ்நாடு அரசாங்கம் தான்.திவால் சட்டம் அமலுக்கு வந்த பின், இதுவரை எந்த அரசு நிறுவனமும், அதன் ஆய்வுக்குள் வரவில்லை. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்துக்கு வருவதற்கு முன்னரே, குறைகள் களையப்பட்டுள்ளன. ஒன்று மட்டும் உண்மை. பொதுத் துறை வங்கி முதலீட்டில் கிடைக்கும் பாதுகாப்பு, ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனத்தில் செய்யும் முதலீட்டுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
வங்கியில் கார் லோன் வாங்கி, சரியான நேரத்தில் தவணை கட்டி வந்தால், ‘சிபில் ஸ்கோர்’ கூடுமா? தற்போது என் சிபில் ஒழுங்கற்று இருக்கிறது.
ஜெய், சேலம்.
இனிவரும் காலத்தில் தவணை தொகையை ஒழுங்காக செலுத்தி, அதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்திக் கொள்ள நினைக்கிறீர்கள். இதனால், உங்கள் பழைய கடன் வரலாறு மறையப் போவதில்லை. அது உங்கள் முதுகில் ஏறிய வேதாளம், இறக்கி வைக்கவே முடியாது. பொதுவாக, ‘கிரெடிட் ஸ்கோர்’ ஆவணம் மூன்றாண்டுகள் வரையான நிதி, கடன் பரிவர்த்தனை விபரங்களைக் கொண்டிருக்கும். ஆனால், தவணைத் தொகையை ஒழுங்காக செலுத்தவில்லை, கடனே மூழ்கிவிட்டது என்பன போன்ற விபரங்கள், 10 ஆண்டுகள் வரை அதில் பிரதிபலிக்கும். முயற்சி செய்து பாருங்கள், உங்களுடையது சாமர்த்தியமான திட்டம் தான்.
இருசக்கர வாகனத்துக்கு ‘இன்ஷூரன்ஸ் பாலிசி’ இல்லையென்றால், சோதனையின்போது போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிக்கின்றனர். இது சரிதானா?
சி.கண்ணன், வத்தலக்குண்டு.
சரி தான். போலீசுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், 2019ன் படி, வாகன இன்ஷூரன்ஸ் இல்லையெனில், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம்; மூன்று மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கலாம். இரண்டாவது முறை மாட்டினால், 4,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். வாகன காப்பீடு அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது நல்லது.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.
ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
[email protected]
ph: 98410 53881

மூலக்கதை