பெண்கள் பிக் பாஷ் லீக்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன்

தினகரன்  தினகரன்
பெண்கள் பிக் பாஷ் லீக்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன்

பெர்த்: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற அடிலைட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெர்த் அணி வீராங்கனைகள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தனர். பெத் மூனி 17 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிய சோபி டிவைன் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இறுதியில் பெர்த் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணி 47 ரன்கள் சேர்த்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்தது. பேட்டிங்கில் கலக்கிய கேப், பந்துவீச்சிலும் அவர் வீசிய முதல் 2 ஓவர்களில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, டிவைன் ரன் ஏதும தராமல் விக்கெட் எடுத்தார். இதனால் பவர் பிளேவில் அடிலெய்ட் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் லாரா மற்றும் தஹிலா இணைந்து நிதானமாக ஆடி அடுத்த 8 ஓவர்களில் 65 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். வெற்றி பெர்த் அணியை விட்டு கை நழுவிய நிலையில் வெறும் 6 பந்துகள் இடைவெளியில் இருவர் விக்கெட்டையும் பெர்த் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். 23 பந்துகளுக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவில் அடிலெய்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் பெர்த் அணி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது. இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தொடர் நாயகி விருதை வென்றார். இந்த தொடரில் இந்திய வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா, ஸ்மிருதி மந்தானா, தீப்தி சர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை