வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பது அவசியம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பது அவசியம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்

டெல்லி: ஓமிக்ரான் புதிய வைரஸ் பரவலை அடுத்து மாநிலங்கள் மிக கவனமாக இருப்பதுடன், வைரஸ் பரவல் மையங்களாக அறியப்பட்ட இடங்களில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்; ஓமிக்ரான் வைரஸின் தீவிரம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.  தீவிரமாக பரவும் தன்மை கொண்டதும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் தாண்டி தாக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று கூறியுள்ளார். மேலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு பாதிப்பு அபாயம் அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் படி கடிதத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஓமிக்ரான் வைரஸ் அபாய நாடுகளாக ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, செக்குடியரசு, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்தும், அந்த பட்டியலில் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே மாநில அரசுகள் கொரோனா பரிசோதனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி அதிக அளவில் தயார் நிலையில் வைத்திருக்கும்படி ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை