தென். ஆப்ரிக்க தொடர் நடக்குமா | நவம்பர் 26, 2021

தினமலர்  தினமலர்
தென். ஆப்ரிக்க தொடர் நடக்குமா | நவம்பர் 26, 2021

புதுடில்லி: ‘‘தென் ஆப்ரிக்க பயணம் குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்கப்படாது,’’ என பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் தெரிவித்தார். 

இந்திய அணி வரும் டிச. 8ல் தென் ஆப்ரிக்கா சென்று மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் தற்போது பிரியங்க் பஞ்சால் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி தென் ஆப்ரிக்கா சென்று, மூன்று 4 நாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது.

ஆனால் தென் ஆப்ரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற புது வகை கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்பதால் உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்திய அணி தென் ஆப்ரிக்கா செல்லுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பொருளாளர் அருண் துமால் கூறியது:

தென் ஆப்ரிக்க தொடர் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன. வீரர்கள் பாதுகாப்பு, உடல்நிலை தான் முக்கியம். சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒருவேளை வேறு ஏதாவது சிக்கல் என்றால் பிறகு இத்தொடர் குறித்து முடிவு செய்யப்படும். மற்றபடி ரசிகர்களை அனுமதிப்பது அல்லது மறுப்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. முதலில் தொடரை நடத்த முன்னுரிமை தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மூலக்கதை