அக்சர், அஷ்வின் ‘சுழல்’ ஜாலம் *இந்திய அணி அசத்தல் | நவம்பர் 27, 2021

தினமலர்  தினமலர்
அக்சர், அஷ்வின் ‘சுழல்’ ஜாலம் *இந்திய அணி அசத்தல் | நவம்பர் 27, 2021

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்தியாவின் அக்சர் படேல், அஷ்வின் ‘சுழல்’ வலையில் நியூசிலாந்து அணி சிக்கியது.  

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் சதம் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்திருந்தது. 

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சகாவுக்கு கழுத்து பிடிப்பு ஏற்பட, கீப்பிங் பொறுப்பை மாற்று வீரர் ஸ்ரீகர் பரத் ஏற்றார். லதாம், யங் நிதானமாக விளையாடினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 151 ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் அஷ்வின் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது பந்து யங்கின் பேட் மீது உரசி செல்ல, கீப்பர் பரத் துடிப்பாக பிடித்து ‘அப்பீல்’ செய்தார். அம்பயர் அவுட் தர மறுத்தார். உடனே ‘ரிவியூ’  கேட்கும்படி பரத் வலியுறுத்தினார். இதில் பேட்டில் பந்து பட்டது தெரியவர, யங்(89) வெளியேறினார். உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ கேப்டன் வில்லியம்சன்(18) வீழ்ந்தார். உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து வலுவாக இருந்தது. 

இதற்கு பின் அக்சர் படேல், அஷ்வின், ஜடேஜா ‘சுழல்’ ஜாலம் காட்ட, விக்கெட்கள் விரைவாக சரிந்தன. அக்சர் வலையில் ராஸ் டெய்லர்(11), ஹென்ரி நிக்கோலஸ்(2) சிக்கினார். நீண்ட நேரம் தொல்லை கொடுத்த லதாமையும்(95) அக்சர் வெளியேற்றினார். ரவிந்திர ஜடேஜா பந்தில் ரச்சின் ரவிந்திரா(13) போல்டானார். டாம் பிளண்டல்(13) நிலைக்கவில்லை. சவுத்தீயை அவுட்டாக்கிய அக்சர்(5) தனது 5வது விக்கெட்டை பெற்றார். அஷ்வினிடம் ஜேமிசன்(23), சாமர்விலே(6) அவுட்டாகினர். கடைசி 8 விக்கெட்டுகள் 82 ரன்களுக்கு சரிந்தன. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் அக்சர் 5, அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.  

பின் 49 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்(3) ஏமாற்றினார். இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்திருந்தது. ஒட்டுமொத்தமாக 63 ரன் முன்னிலை பெற்றிருந்தது. இன்று நமது பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடினால், வலுவான ஸ்கோர் எடுத்து நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.


சிறந்த ஜோடி

லதாம்–யங் சேர்ந்து 151 ரன் சேர்த்தனர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன் சேர்த்த துவக்க ஜோடி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தனர். முதலிடத்தில் மார்க் ரிச்சர்ட்சன்–வின்சென்ட் ஜோடி(231 ரன்) உள்ளது. 

50

நேற்று சுப்மனை அவுட்டாக்கி ஜேமிசன், அதிவேகமாக 50 விக்கெட்(9 போட்டி) வீழ்த்திய நியூசிலாந்து வீரரானார். இவர் ஷேன் பாண்ட்(12 போட்டி) சாதனையை தகர்த்தார்.

 

விக்கெட் வேட்டை

அக்சர் இதுவரை 4 டெஸ்டில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டிகள் அனைத்திலும் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்துள்ளார். 

* இதையடுத்து குறைந்த டெஸ்டில் 5 முறை, 5 விக்கெட் சாய்த்த முதல் இந்தியர் ஆனார். இவ்வரிசையில் உலகின் 4வது பவுலர் ஆனார் அக்சர்.

* 2021ல் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் இரண்டாவது இடம்(4 முறை) பெற்றார் அக்சர். முதலிடத்தில் பாகிஸ்தானின் ஹசன் அலி(5 முறை 5 விக்.,) உள்ளார்.

* முதல் நான்கு டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார் அக்சர் (30 விக்.,). முதலிடத்தில் ஹிர்வானி(36) உள்ளார்.

* இந்த ஆண்டு டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரானார் அஷ்வின்(41). இவர், பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிதியை(39 விக்கெட்) முந்தினார்.

 

அம்பயர் எச்சரிக்கை

இந்திய அணி ‘சீனியர்’ அஷ்வின், நேற்று அம்பயர் நிதின் மேனனுக்கு, வலது புறமாக சென்று கிரீசில் கால்வைத்து பந்தை வீசினார். ஆனால் தனது பார்வை மறைக்கிறது, ‘எல்.பி.டபிள்யு.,’ அவுட் தர முடியாது என்றார் அம்பயர். தவிர ஆடுகளத்தின் அபாய பகுதியில் அஷ்வின் கால் படுவதாகவும் கூறப்பட்டது. இதைக் கண்டு கொள்ளாத அஷ்வின் தொடர்ந்து அதேபோல பந்து வீசினார். பின் கேப்டன் ரகானேயிடம் தெரிவிக்க சர்ச்சை தீர்ந்தது. 

மூலக்கதை