நடிகர்கள், தொழிலதிபர்களிடம் ரூ200 கோடி மோசடி செய்த பெண் கைது

தினகரன்  தினகரன்
நடிகர்கள், தொழிலதிபர்களிடம் ரூ200 கோடி மோசடி செய்த பெண் கைது

திருமலை: பெரிய அளவிலான தொழில் தொடங்கப்போகிறேன் என்றும் அதிக வட்டி தருவதாகவும் கூறி நடிகர்கள், தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்த பெண்ணை, அவரது கணவருடன் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் காந்திபேடு என்ற இடத்தில் வசிப்பவர் சீனிவாஸ். இவரது மனைவி ஷில்பாசவுத்ரி (33). இவர் ஐதராபாத் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தான் அதிகளவு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன் என கூறுவாராம். அவ்வாறு அறிமுகமான பிறகு அவர்களிடம் வசீகரமாகவும் பேசுவாராம். அதன்பிறகு அந்த விஐபிகளுக்கு பிரமாண்ட விருந்து ஏற்பாடு செய்வாராம். அந்த விருந்தில் பங்கேற்கும் விஐபிக்களிடம், சமூக சேவை செய்து வரும் நான், பெரிய தொழில் தொடங்க உள்ளேன். அதற்காக எனக்கு பணம் தேவைப்படுகிறது. நீங்கள் என்னிடம் தரும் பணத்திற்கு பிரதிபலனாக அதிக வட்டி மற்றும் பணம் இரட்டிப்பாக தருவதாக ஷில்பாசவுத்ரி கூறுவாராம். இதனை நம்பிய தொழிலதிபர்கள் மற்றும் உயரதிகாரிகள், டோலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் ஷில்பாசவுத்திரியிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் ரூ200 கோடி வரை வசூல் செய்துள்ளார். இதற்கு அவரது கணவரான சீனிவாசும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஐதராபாத் போலீசில் கொடுத்த புகாரில் ஷில்பாசவுத்ரி, தன்னிடம் ரூ.1.5 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷில்பாசவுத்ரி மற்றும்  அவரது கணவரான சீனிவாஸ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் யார், யாரிடம் எவ்வளவு மோசடி செய்துள்ளனர் என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை