அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ் 'ஒமைக்ரான்':பாதிப்புகளை தவிர்க்க தயாராகும் உலக நாடுகள்

தினமலர்  தினமலர்
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒமைக்ரான்:பாதிப்புகளை தவிர்க்க தயாராகும் உலக நாடுகள்

வாஷிங்டன்:அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான, 'ஒமைக்ரான்' உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புள்ள தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் துவங்கி இரண்டு ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில், தற்போது புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என, உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.தென் ஆப்ரிக்கா, மொசாம்பிக் போன்ற நாடுகளிலும், ஹாங்காங்கிலும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.

வேகமாக பரவக்கூடியது


இந்த வைரஸ் பல வகைகளில் உருமாறியதாக உள்ளதாகவும், முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவக் கூடியதாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே மிக அதிக பாதிப்பு மற்றும் உயிர் பலி ஏற்பட்டுள்ள டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதிய வகை வைரஸ் தென்பட்டுள்ளது, உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மருத்துவ கட்டமைப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளதால், ஒமைக்ரான் வைரசால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க உலக நாடுகள் தயாராகி வருகின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் என பல நாடுகளும், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணியர் வருகைக்கு கடும் நிபந்தனைகளை விதித்துள்ளன.
இதுவரை புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட அனைவரும், ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் என்றும், அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என்பதும், உலக நாடுகளின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.'பீட்டா போன்ற சில உருமாறிய கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 'புதிய வைரசின் தன்மை குறித்து தெரியாமல் பீதியடையத் தேவையில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தான்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர். உலகிலேயே மிக அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள இஸ்ரேல், இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தீவிர பரிசோதனை

தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் இருந்து, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்துக்கு வந்த பயணியர் அனைவருக்கும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு, பயணியர் ஆறு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இதுபோல், தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் இருந்து வந்த விமான பயணியருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
தென் ஆப்ரிக்காவில் 24 சதவீத மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இங்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால், புதிய வகை வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.''பணக்கார நாடுகள் போட்டி போட்டு தடுப்பூசிகளை வாங்கி விடுகின்றன.
''உலகம் முழுதும் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாத நிலையில், தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக எந்த நாடும் கூற முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது,'' என, பிரிட்டனின் சவுத்ஹாம்ப்டன் பல்கலையின் மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஹெட் கூறியுள்ளார்.'கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், மற்றொரு பெரிய பாதிப்பு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும்' என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

மரபணு மாறும் வைரஸ்!

கொரோனா வைரஸ் அதிகமான மக்களுக்கு பரவினால், அதன் மரபணு மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுவரை கொரோனா வைரசில் ஆயிரக்கணக்கான சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், அதில் பெரும்பாலானவை குறைந்த பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தின. உயிர்ப்புடன் இருப்பதற்காக இந்த வைரஸ், மரபணு மாற்றங்களில் ஈடுபடுகிறது.
இதில், 'ஸ்பைக் புரோட்டின்' எனப்படும் வைரசின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆபத்தானவையாக உள்ளன. மனித செல்களுக்குள் நுழைய, மேற்பரப்பில் ஏற்படும் இந்த மாற்றங்கள் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக டில்லியில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலர் மிஸ்ரா, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

அதிக வீரியமுள்ளது

அப்போது, உருமாறிய அதிக வீரியமுள்ள ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கினர்.நம் நாட்டில் இந்த புதிய வகை வைரஸ் பரவுவதற்கு முன்னரே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் பிரதமர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, சர்வதேச விமான பயணங்களுக்கான தடைகளை தளர்த்த வரையறுக்கப்பட்டு உள்ள திட்டங்களை மறுஆய்வு செய்யும்படி வலியுறுத்தினார்.

அறிவுறுத்தல்

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணியரை கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பரி சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்திய பிரதமர் மோடி, “இந்த வகை வைரஸ் பரவி உள்ள நாடுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறை களை மக்கள் முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும், தடுப்பூசியின் இரண்டாம் டோஸை விரைந்து செலுத்தி முடிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

மும்பையில் கட்டுப்பாடு!

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தென் ஆப்ரிக்காவில் இருந்து மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பயணியருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அங்கிருந்து வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என்றும், அதில் பாதிப்பு உறுதியானால் வைரஸ் வகையை கண்டறிய, அவர்களுக்கு மரபணு சோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர, தென் ஆப்ரிக்காவில் இருந்து வரும் பயணியர் அனைவரையும் தனிமைப்படுத்தி தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர ஆய்வில் சுகாதார அமைப்பு

உருமாறியுள்ள வீரியம் மிக்க வைரசுக்கு ஒமைக்ரான் என பெயரிட்ட உலக சுகாதார அமைப்பு, 'கவலைக்குரிய வகை வைரஸ்' என்றும் பட்டியலிட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் பரவிய தென் ஆப்ரிக்காவில் இருந்து, இது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறது. இந்த வைரஸ் பல முறை மரபணு மாறி உருவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக அதன் வீரியம் மிக மோசமாக இருக்கும் என கண்டறியப்பட்டுஉள்ளது.இந்த வைரஸ் குறித்த முழு தகவல்களையும் சேகரிக்க, ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய தகவல்கள் கிடைத்த பின், அவற்றை பொதுமக்களிடம் உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒமைக்ரான் வைரசால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து, உலக சுகாதார அமைப்பிற்கான தொழில் நுட்ப ஆலோசனைக் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றக்கோரி, மக்களிடம் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

பெயர் காரணம் என்ன?

கொரோனா வைரசின் மரபணு மாறிய வகைகளுக்கு, கிரேக்க எழுத்துகளின் வரிசையில் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், 'ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா' என பெயரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது உருவாகி உள்ள புதிய வகை வைரசுக்கு, கிரேக்க எழுத்து வரிசையில் உள்ள, 'நு மற்றும் ஷீ' என பெயரிட வேண்டும். ஆனால், இந்த எழுத்துகளை விட்டுவிட்டு, அதற்கு அடுத்த ஒமைக்ரான் என்ற எழுத்தை வைத்து பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
நு என்ற எழுத்து, ஆங்கில எழுத்தான 'நியூ'வைப் போல் இருக்கும் என்பதால், அந்த எழுத்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஷீ எழுத்தை வைரசுக்கு பெயராக சூட்டினால், அது, சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கை தவறாக குறிப்பிடுவதுபோல் இருக்கும் என கருதி, அந்த எழுத்தையும் உலக சுகாதார அமைப்பு தவிர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்:அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான, 'ஒமைக்ரான்' உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புள்ள தென் ஆப்ரிக்கா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை