மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி நேரில் ஆஜராக சம்மன்

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு விசாரணைக்கு டிசம்பர் 20ம் தேதி நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கடந்த 2006ம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில், ரூ.600 கோடி வரை முதலீடு செய்வதற்கு மட்டுமே ஒன்றிய நிதி அமைச்சகத்தால் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், விதிகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.மேலும், முதலீட்டுக்கு அனுமதி பெற்று கொடுக்க ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவிகள் செய்து, அதற்கு கைமாறாக பல கோடி ரூபாய் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 2 துறைகளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாக்பால் தலைமயிலான அமர்வில், இந்த வழக்கில் நேற்று குற்றப்பதிவு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரை அடுத்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
மூலக்கதை
