மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய அரசு குழு திருப்பதியில் ஆய்வு

தினகரன்  தினகரன்
மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய அரசு குழு திருப்பதியில் ஆய்வு

திருப்பதி:  திருப்பதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒன்றிய குழு நேற்று ஆய்வு செய்தது. திருப்பதியில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலைகள் கால்வாய்கள் உடைந்து மழை நீர் பெருக்கெடுத்து வீடுகளில் புகுந்தது. சித்தூர், கடப்பா, அனந்தபூர், நெல்லூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்பட்டதையடுத்து திருப்பதியில் நேற்று குணால் சத்யார்த்தி, அபய் குமார், ஸ்ரீநிவாஸ், சர்வன் குமார் சிங் ஆகிய 4 பேர் கொண்ட ஒன்றிய ஆய்வுக்குழு வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்தது.திருப்பதியில் உள்ள மின்வாரிய சாலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அங்கு அமைக்கப்பட்டிருந்த போட்டோ கேலரியில் நகரின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்களை கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர், அங்கிருந்து எம்ஆர் பள்ளி பாலாஜி காலனி திருப்பதி மேம்பாலம் குரலகுண்டா ஆட்டோ நகர் கிருஷ்ணா நகர், பூலவாணி குண்டா உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவரங்களை அதிகாரிகள் அவர்களுக்கு எடுத்துரைத்தனர். பொது மக்களிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் ஹரிநாராயணன் எம்எல்ஏ கருணாகர், மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா, மேயர் சிரிஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மூலக்கதை