ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்தியா

தினகரன்  தினகரன்
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்தியா

புவனேஸ்வர்: போலந்து அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் 8-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்தியா, ஜூனிய உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரின் பி பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியன் இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் 4-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. அடுத்து கனடாவுடன் நடந்த லீக் ஆட்டத்தில் 13-1 என அபாரமாக வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. இந்நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று போலந்து அணியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளுமே கடும் நெருக்கடியுடன் களமிறங்கின. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து 6-0 என முன்னிலை பெற்றனர். கடைசி கட்டத்தில் கடுமையாகப் போராடிய போலந்து 2 கோல் போட்டது. அதன் பிறகும் உத்வேகத்துடன் விளையாடிய இந்தியா மேற்கொண்டு 2 கோல் அடித்து 8-2 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியதுடன் பி பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

மூலக்கதை