அக்சர், அஷ்வின் அபார பந்துவீச்சு: முன்னிலை பெற்றது இந்தியா

தினகரன்  தினகரன்
அக்சர், அஷ்வின் அபார பந்துவீச்சு: முன்னிலை பெற்றது இந்தியா

கான்பூர்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், அக்சர் மற்றும் அஷ்வினின் அபார பந்துவீச்சால் இந்தியா முதல் இன்னிங்சில் 49 ரன் முன்னிலை பெற்றது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 111.1 ஓவரில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் 105 ரன் விளாசினார். கில் 52, ஜடேஜா 50, கேப்டன் ரகானே 35, புஜாரா 26, அஷ்வின் 38 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 5 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்திருந்தது. டாம் லாதம் 50 ரன், வில் யங் 75 ரன்னுடன் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 151 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில் யங் 89 ரன் (214 பந்து, 15 பவுண்டரி) விளாசி அஷ்வின் சுழலில் மாற்று விக்கெட் கீப்பர் பாரத் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 18, ராஸ் டெய்லர் 11, ஹென்றி நிகோல்ஸ் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சதத்தை நெருங்கிய டாம் லாதம் 95 ரன் எடுத்த நிலையில் (282 பந்து, 10 பவுண்டரி) அக்சர் சுழலில் பாரத்தின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்த நியூசி. அணி, அடுத்த 30 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திடீர் சரிவை சந்தித்தது. ரச்சின் ரவிந்திரா, டாம் பிளண்டெல் தலா 13 ரன்னில் ஆட்டமிழக்க, டிம் சவுத்தீ 5 ரன் எடுத்து அக்சர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். உறுதியுடன் போராடிய கைல் ஜேமிசன் 23 ரன்னில் வெளியேற, வில்லியம் சாமர்வில்லி 6 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஸ்டம்புகள் சிதற நடையை கட்டினார். நியூசிலாந்து 142.3 ஓவரில் 296 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அஜாஸ் படேல் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அக்சர் படேல் 34 ஓவரில் 6 மெய்டன் உள்பட 62 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அஷ்வின் 3, உமேஷ், ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 49 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்துள்ளது. கில் 1 ரன் எடுத்து ஜேமிசன் வேகத்தில் கிளீன் போல்டானார். மயாங்க் 4 ரன், புஜாரா 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இந்தியா 63 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை