சதம் விளாசினார் ஸ்ரேயாஸ் * கைவிட்ட இந்திய பவுலர்கள் | நவம்பர் 26, 2021

தினமலர்  தினமலர்
சதம் விளாசினார் ஸ்ரேயாஸ் * கைவிட்ட இந்திய பவுலர்கள் | நவம்பர் 26, 2021

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் கடந்து அசத்தினார். இந்திய பவுலர்கள் தடுமாறியதால், நியூசிலாந்து அணி சுலபமாக ரன் சேர்த்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது.

ஸ்ரேயாஸ் சதம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்தின் சவுத்தீ துவக்கத்தில் இருந்தே ‘வேகத்தில்’ மிரட்டினார். ஜடேஜாவை (50) முதலில் போல்டாக்கினார். மறுபக்கம் அசத்திய ஸ்ரேயாஸ் அறிமுக டெஸ்டில் சதம் எட்டினார்.

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதும், தொடர்ந்து அசத்திய சவுத்தீ, சகாவை (1) வெளியேற்றினார். சவுத்தீ ஓவரில் அஷ்வின் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடிக்க, இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியது. மறுபக்கம் ஸ்ரேயாஸ் (105), அக்சர் படேல் (3) என இருவரும் சவுத்தீயிடம் ‘சரண்’ அடைந்தனர். கடைசி நேரத்தில் தாக்குப் பிடித்த அஷ்வின், 38 ரன் எடுத்து, அஜாஜ் சுழலில் போல்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வேகத்தில் மிரட்டிய சவுத்தீ, 5 விக்கெட் சாய்த்தார்.

நல்ல துவக்கம்

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில்லியம் யங், டாம் லதாம் ஜோடி அருமையான துவக்கம் கொடுத்தது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் பந்துகளை இருவரும் எளிதாக சமாளித்தனர். சுழலுக்கு சற்றும் கைகொடுக்காத ஆடுகளத்தில் அஷ்வின், ஜடேஜா பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். யங், இரண்டாவது அரைசதம் எட்டினார். லதாம், 21வது அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்து, 216 ரன் பின்தங்கி இருந்தது.  லதாம் (50), யங் (75) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கோட்டைவிட்ட ரகானே

நேற்று நியூசிலாந்து அணிக்கு சாதகமான நாள். டாம் லதாமிற்கு மூன்று முறை ‘அவுட்’ தரப்பட்ட போதும், ‘ரிவியூ’ கேட்டு மீண்டு வந்தார்.

* போட்டியின் 43.4 ஓவரில் அஷ்வின் பந்தில் லதாம் கொடுத்த ‘கேட்ச்சை’ ரகானே ‘சிலிப்’ பகுதியில் நழுவவிட அரைசதம் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

* ஒரு கட்டத்தில் மயங்க் அகர்வால், பேட்ஸ்மேன் அருகில் மண்டியிட்டு பீல்டிங் செய்து பார்த்தார். கடைசி வரை ‘கேட்ச்’ வரவேயில்லை.

 

16

டெஸ்ட் அரங்கில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 16 வது இந்தியர் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர் (105 ரன்). இதற்கு முன் லாலா அமர்நாத் (1933), முகமது அசார் (1984), கங்குலி (1996), சேவக் (2001), ரோகித் (2013), பிரித்வி ஷா (2018) உட்பட 15 பேர் இதுபோல சாதித்தனர்.

* கான்பூர் மைதானத்தில் குண்டப்பா விஸ்வநாத்துக்குப் பின் (1969, எதிர்–ஆஸி.,) அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இரண்டாவது இந்தியர் ஆனார் ஸ்ரேயாஸ்.

 

‘தீயாக’ சவுத்தீ

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ‘சீனியர்’ டிம் சவுத்தீ 32. கான்பூர் டெஸ்ட் முதல் நாளில் தொடையின் பின்பகுதியில் காயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் நேற்று மீண்டு வந்த சவுத்தீ, உணவு இடைவேளைக்கு முன், தொடர்ந்து 10 ஓவர்கள் வீசி, ஜடேஜா, சகா, ஸ்ரேயாஸ், அக்சர் படேலை அவுட்டாக்கினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

அம்பயர் குளறுபடி

கான்பூர் டெஸ்டில் இந்தியாவின் நிதின் மேனன், அனில் சவுத்ரி மைதான அம்பயர்களாக உள்ளனர். இவர்கள் வழங்கிய 6 தீர்ப்புகள் தவறாக அமைந்தன. இந்திய அணி பேட்டிங் செய்த போது, அவுட் தர மறுத்தனர். ‘ரீப்ளேயில்’ பந்து ஸ்டம்சை தாக்கியது என்றாலும் ‘அம்பயர்ஸ் கால்’ என்பதால் தீர்ப்புகள் மாற்றப்படவில்லை.

* நேற்று நியூசிலாந்தின் டாம் லதாமிற்கு 2 ‘எல்.பி.டபிள்யு.,’, 1 கேட்ச் என இவர்கள் வழங்கிய மூன்று ‘அவுட்’, ‘ரீப்ளேயில்’ தவறு எனத் தெரியவர, லதாம் தப்பினார்.

 

‘வேஸ்ட்’ சகா

இந்திய அணி விக்கெட் கீப்பர் சகா, களமிறங்கிய 9 இன்னிங்சில் 9, 0, 8, 21, 24, 12, 17, 9, 4 ரன் எடுத்திருந்தார். ரிஷாப் பன்ட் இல்லாத நிலையில் கான்பூர் டெஸ்டில் வாய்ப்பு பெற்ற இவர், நேற்று 1 ரன்னுக்கு அவுட்டாகி வாய்ப்பை வீணடித்தார்.

மூலக்கதை