தென் ஆப்ரிக்கா செல்லுமா இந்தியா * புதிய வகை கொரோனாவால் அச்சம் | நவம்பர் 26, 2021

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்கா செல்லுமா இந்தியா * புதிய வகை கொரோனாவால் அச்சம் | நவம்பர் 26, 2021

புதுடில்லி: புதிய வகை கொரோனா பரவல் காரணமாக இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்திய அணி வரும் டிச. 8ல் தென் ஆப்ரிக்கா சென்று மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் தற்போது பிரியங்க் பஞ்சால் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி தென் ஆப்ரிக்கா சென்று, மூன்று 4 நாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது.

இதனிடையே தென் ஆப்ரிக்காவில் ‘பி.1.1.529’ என்ற புதிய வகை கொரோனா கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இது மிக வேகமாக பரவும், தடுப்பூசிக்கு கட்டுப்படாது, அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும். இதனால் தற்போது தென் ஆப்ரிக்கா சென்றுள்ள நெதர்லாந்து அணி, ஒருநாள் தொடரை (3 போட்டி) ரத்து செய்துவிட்டு நாடு திரும்ப உள்ளது.

இங்கிலாந்து (21 வயது) ஹாக்கி அணி, தனது தென் ஆப்ரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளது. தவிர இந்திய அணி விளையாட உள்ள ஜோகனஸ்பர்க், செஞ்சுரியன் பகுதிகளில் புதிய கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தென் ஆப்ரிக்க தொடரை ரத்து செய்தன. இந்திய அணியும் செல்லாத பட்சத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுக்கு பெரியளவு இழப்பு ஏற்படும்.

மூலக்கதை