கொத்து கொத்தாக கொன்ற டெல்டாவை விட கொடூரமானது தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ்: உலக நாடுகள் பீதி

தினகரன்  தினகரன்
கொத்து கொத்தாக கொன்ற டெல்டாவை விட கொடூரமானது தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ்: உலக நாடுகள் பீதி

ஜெனிவா: டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இது தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளன. உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது பெரும்பாலான நாடுகளில் வெகுவாக குறைந்து விட்டது. சுமார் 2 ஆண்டுக்குப் பிறகு மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்லக் கூடிய அளவிற்கான புதிய வகை கொடிய கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.பி.1.1.529 என்ற அறிவியல் பூர்வ பெயரை கொண்ட இந்த வைரசுக்கு ‘நு’ என பெயரிடப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. மற்ற வைரஸ் பிறழ்வுகளிலேயே மிக மோசமாக 50 பிறழ்வுகளை இந்த புதிய வகை வைரஸ் கொண்டிருப்பதே பீதிக்கு காரணமாகும். இதன் முள் புரதத்தில் (ஸ்பைக் புரோட்டின்) மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த முள்ளை பயன்படுத்தி தான் வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழையும், நோய் மண்டலத்தை தாக்கும். எனவே, கொரோனா தடுப்பூசிகள் அனைத்துமே இந்த புரதத்தை  குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும் உயிர் பலியை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய டெல்டா வைரசில் கூட இவ்வளவு பிறழ்வுகள் இல்லை என்பதால், புதிய வைரஸ் மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம், தற்போது, உலகில் உள்ள தடுப்பூசிகளின் வீரியத்தை தாண்டி பாதிக்கலாம், அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் நுழையும் சக்தி கொண்டதாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதே சமயம் புதிய வகை வைரஸ் ஆபத்து மிக்க வகையை சேர்ந்ததா என வகைப்படுத்தவும் அதற்கு புதிய பெயரை சூட்டவும் உலக சுகாதார நிறுவனம் சிறப்பு கூட்டத்தையும் கூட்டி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய கொடிய வகை வைரஸ் மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக 50 சதவீதம் மட்டுமே செயல்திறன் கொண்டதாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், புதிய வகை வைரசுக்கு எதிராக கோவாக்சினின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வகை வைரஸ் செய்தியால், உலகளாவிய பங்கு சந்தைகளிலும் நேற்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.ஆப்ரிக்க நாடுகளின் பயணிகளுக்கு தடைபுதிய வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.* ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஏற்கனவே கொரோனா அதிகரித்து வருவதால், தென் ஆப்ரிக்காவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன. * தென் ஆப்ரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 ஆப்ரிக்க நாடுகளை சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து சேர்த்துள்ளது. அந்நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. * தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 7 ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்களையும், கடந்த 14 நாட்களில் அங்கு சென்று வந்தவர்களையும் சிங்கப்பூரில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.* தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.கோவிஷீல்டு ஏற்றுமதி: சீரம் தொடங்கியது இந்்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்திய மக்களின் தேவைக்காக, இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்து இருந்தது. தற்போது, தடுப்பூசிகள் கையிருப்பு அதிகமாகி இருப்பதால், இந்த நிறுவனம் நேற்று முதல் வெளிநாடுகளுக்கு மீண்டும் இந்த தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது.  இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆதார் பூனாவாலா அளித்த பேட்டியில், `மீண்டும் ஏற்றுமதியைத் தொடங்கி இருப்பது ஒரு மாபெரும் தருணம். இந்தியாவில் இருந்து மலிவு விலையில், சிறந்த தரத்துடன் ஏற்றுமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளையே உலக நாடுகள் பெருமளவில் சார்ந்துள்ளன,’’ என்று தெரிவித்தார்.பங்குச்சந்தையில் கடும் சரிவு: ரூ.7.45 லட்சம் கோடி இழப்புகொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஒருமுறை உலகளவில் பங்குச்சந்தையில் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்திய பங்கு சந்தையில் கடந்த 22ம் தேதி முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில்  ரூ.8.22 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதேபோல், தென் ஆப்ரிக்காவில் புதிய வைரஸ் பரவிய தகவல் வெளியானதும், உலகம் முழுவதும் பங்கு சந்தையில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் நேற்று 1,687.94 புள்ளிகள் சரிந்து, 57,107.15 புள்ளிகளாக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி, வர்த்தக முடிவில் 510 புள்ளிகள் சரிந்து, 17,026 ஆனது. இதனால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ.265.66 லட்சம் கோடியில் இருந்து, ரூ.258.21 லட்சம் கோடியாக சரிந்தது. அதாவது, ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத கடும் சரிவாக கருதப்படுகிறது.எத்தனை பேருக்கு பரவியது?தென் ஆப்ரிக்காவில் 22 பேருக்கும், போட்ஸ்வானாவில் 4 பேருக்கும், ஹாங்காங் மற்றும் இஸ்ரேலில் ஒருவருக்கும் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் ஒரே நோயாளியிடம் இருந்து இந்த புதிய வகை வைரஸ் உருவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் இப்போதே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பீட்டா போல ‘புஸ்’ ஆகலாம்சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் உருவானதில் இருந்து இதுவரை பல நூறு பிறழ்வுகள் உருவாகி உள்ளன. அவற்றில் ஆபத்தான பிறழ்வுகள் என 4 வகைகளை உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. அவை, ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351), காமா (பி.1), டெல்டா (பி.1.617.2) இதில் பீட்டா வகை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்தனர். ஆனால், டெல்டா வைரஸ்தான் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியது. அது போல், இந்த புதிய வைரசும் பீட்டா போல ‘புஸ்’ ஆகவு்ம் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை