மாநிலங்களின் மூலதன செலவு பின்தங்கியது தமிழக அரசு

தினமலர்  தினமலர்
மாநிலங்களின் மூலதன செலவு பின்தங்கியது தமிழக அரசு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மூலதன செலவுகளை அதிகம் மேற்கொண்ட மாநிலங்களில் தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
அதேசமயம், அதிக மூலதன செலவுகளை மேற்கொள்ளக்கூடிய உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், பட்ஜெட் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை கூட செலவழிக்காமல், பின்தங்கிய நிலையில் உள்ளன.இதன் காரணமாக, மாநிலங்களின் ஒட்டுமொத்த மூலதன செலவு, இக்காலகட்டத்தில் 28.4 சதவீதமாக குறைந்துள்ளது என, இது குறித்த தகவல்களை திரட்டிய, ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளை அடுத்து, தனியார் நிறுவனங்கள் இன்னும் அதிகளவில் மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றன.இந்நிலையில், பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில், அரசு தரப்பில் அதிகளவில் மூலதன செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.மத்திய அரசு இத்தகைய செலவுகளை தீவிரமாக மேற்கொண்ட போதிலும், மாநிலங்கள் பின்தங்கி உள்ளன என்பதும், கேர் ரேட்டிங்ஸ் அறிக்கையில் வாயிலாக தெரியவந்துள்ளது.
நடப்பு நிதியாண்டு மூலதன செலவுகளுக்கான மத்திய அரசின் பட்ஜெட், 5.54 லட்சம் கோடி ரூபாயாகும். இதில், 40 ஆயிரத்து, 374 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு கடனாக வழங்குவதும் அடக்கம். எனவே, மத்திய அரசின் நேரடி மூலதன செலவு பட்ஜெட் 5.13 லட்சம் கோடி ரூபாய். இதில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 2.09 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு செலவழித்துள்ளது. இது, இலக்கில் 41 சதவீதம் ஆகும்.
அதேசமயம், 24 மாநிலங்கள் 5.76 லட்சம் கோடி ரூபாய் இலக்கை நிர்ணயித்துள்ளன. ஆனால், இவை இதுவரை செலவழித்துள்ளது 1.64 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இது வெறும் 28.4 சதவீதம் ஆகும்.உத்தர பிரதேச மாநிலம் அதன் பட்ஜெட் இலக்கில் 20.8 சதவீதமே செலவழித்து உள்ள நிலையில், தெலுங்கானா 51.9 சதவீதம் செலவழித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, பீஹார், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கி உள்ளன என்றும் கேர் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில், அரசு தரப்பில் அதிகளவில் மூலதன செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், பல மாநில அரசுகள் மந்தமாகவே செயல்படுகின்றன.

மூலக்கதை