இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா இன்று கொண்டாட்டம்: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

தினகரன்  தினகரன்
இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா இன்று கொண்டாட்டம்: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

டெல்லி : இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா கொண்டாட்டம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. அண்ணல் அம்பேதகர் அளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ம் ஆண்டு இதே நாளில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை பறைசாற்றும் வகையிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நாட்டு மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி தேசிய அரசியல் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் காலை 11 மணிக்கு கொண்டாடப்படும் விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். குடியரசு தலைவரின் உரைக்கு பிறகு அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அரசு அரசியலைப்பு அமைப்பு சட்டத்தை அவமரியாதை செய்து வருவதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2வது ஆண்டாக இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.     காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இன்று நடக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று திமுக, சிவசேனா, ஆர்எஸ்பி, என்சிபி, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜேஎம்எம், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் புறக்கணிக்கும் எனத் தெரிகிறது.அதேசமயம், பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிஸ், தெலுங்குதேசம் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த கட்சிகளின் எம்.பி.க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது

மூலக்கதை