கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, தைரியமாக எதிர்கொண்ட பாதுகாப்பு வீரர்களுக்கும் வீர வணக்கம் : அமித்ஷா

தினகரன்  தினகரன்
கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, தைரியமாக எதிர்கொண்ட பாதுகாப்பு வீரர்களுக்கும் வீர வணக்கம் : அமித்ஷா

மும்பை: மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நினைவு நாளில், உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளார்.அந்த டுவிட்டர் பதிவில், \'மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, தைரியமாக எதிர்கொண்ட அனைத்து பாதுகாப்பு வீரர்களுக்கும் வீர வணக்கம். உங்கள் துணிச்சலைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படுகிறது. உங்கள் தியாகத்திற்கு தேசம் எப்போதும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கும்\' என்று குறிப்பிட்டிருந்தார்.இதேபோல், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, துணை முதல்வர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மூலக்கதை