தமிழகத்தில் பெரியளவில் முதலீடு செய்ய ரசாயன தொழில்துறையினருக்கு அழைப்பு: டெல்லியில் மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் பெரியளவில் முதலீடு செய்ய ரசாயன தொழில்துறையினருக்கு அழைப்பு: டெல்லியில் மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

புதுடெல்லி: ‘ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்,’ என டெல்லியில் நடைபெற்ற ரசாயன தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்தார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து நடத்தும், ‘ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள்’ தொடர்பான உச்சி மாநாடு ஒன்றிய சுகாதாரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் தொழில் துறைக்கான சிறந்த கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளது. நாட்டில் கொரோனா பெருந்தோற்று காலத்தில் கூட தமிழகம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதில், முக்கியமாக தமிழக அரசின் முன்னோடியான குறிக்கோள் மாநிலத்தின் பொருளாதார அளவை ட்ரில்லியன் என்ற அளவில் மாற்றுவதே ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழில் தொடங்க வரும் அனைத்து தொழில்துறையினருக்கும் தமிழக அரசு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. ரசாயன பொருட்களை உற்பத்தி செய்து அதனை நாட்டுக்கு தரும் மாநிலத்தின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகம் கடற்பரப்பை அதிகம் கொண்ட மாநிலம் மட்டுமல்ல; 5 பெரிய துறைமுகங்கள், 4 சர்வதேச விமான நிலையங்கள், 32 ஜிகா வாட்ஸ் கொண்ட மின்சக்தி என தொழில் தொடங்க அனைத்து வசதிகளும் தமிழகத்தில் உள்ளது. மேலும், பிளாஸ்டிக் மற்றும் லாஜிஸ்டிக் தேவைக்காக 306 ஏக்கர் பரப்பளவில் பாலிமர் பூங்கா உருவாக்க உள்ளது. இதைத்தவிர, மாநிலத்தில் 2,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ளன. அதனால், ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றார்.

மூலக்கதை