பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய தயார்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய தயார்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் அதனை மறுபரிசீலனை செய்து மாற்றங்களை கொண்டு வரத் தயார்,’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, குழு அமைத்து முடிவெடுக்கும்படி கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‘மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியது. அதே நேரம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு ரூ.8 லட்சம் வருமான உச்ச வரம்பு எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது?’ என கேட்டது. அதற்கு, சின்கா கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் இந்த இடஒதுக்கீடும், ரூ.8 லட்சம் என்ற வருமான உச்சவரம்பும்  நிர்ணயம் செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு, அதற்கான ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து புதிய மாற்றங்களை செய்ய  அரசு தயாராக உள்ளது. அது பற்றி அடுத்த 4 வாரங்களுக்கு ஆலோசனை செய்யப்படும். அதே நேரம், அரசியலமைப்பு திருத்தத்தை நீதிமன்றங்கள் தடுப்பது இதுவே கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.உடனே குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘அது உங்கள் கையில்தான் உள்ளது. எல்லாவற்றையும் நீங்கள் சரியான முறையில் செயல்படுத்தும்படி நடந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எவ்வளவு தாமதம் ஆகிறதோ, அந்தளவுக்கு இழுபறி நிலையும் ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும். நாம் தற்போது நவம்பர் இறுதியில் இருக்கிறோம். இந்த பிரச்னையால் மருத்துவக் சேர்க்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு கவலை தருகிறது,’ என தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் தத்தா, ‘இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை டிசம்பர் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த 10 சதவீத இடஒதுக்கீடு, ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு அளவுகோலில் மாற்றங்கள் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. இதன் அடிப்படையில், மருத்துவ கவுன்சிலிங்கும் ஒத்திவைக்கப்படுகிறது,’என கூறி, விசாரனையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை