சர்வதேச போலீஸ் அமைப்புக்கு சர்ச்சைக்குரிய தலைவர் தேர்வு: சித்ரவதைக்கு பெயர் போனவர்

தினகரன்  தினகரன்
சர்வதேச போலீஸ் அமைப்புக்கு சர்ச்சைக்குரிய தலைவர் தேர்வு: சித்ரவதைக்கு பெயர் போனவர்

இஸ்தான்புல்: ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக, கடந்த 1923ம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் ‘இன்டர்போல்’ எனப்படும் உலக போலீஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வெய் இருந்து வந்தார். இவரது பதவிக் காலம் 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சீனா சென்ற அவர் திரும்பி வரவில்லை. ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சீன அரசினால் கைது செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இன்டர்போலின் இந்தாண்டு பொதுக்கூட்டம் இஸ்தான்புல்லில் நேற்று நடந்தது. இதில், இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த, சர்ச்சைக்கு பெயர் போன மேஜர் ஜெனரல் அகமது நசீர் அல் ரைசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகளாகும். இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சக ஐஜி.யாக பணியாற்றி வருகிறார். இவர் மீது சித்ரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சர்ச்சைக்குரிய இவர், இன்டர்போல் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது சர்வதேச போலீஸ் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* நிர்வாக குழுவில் சிபிஐ சிறப்பு இயக்குநர் சின்காஇன்டர்போல் கமிட்டியின் நிர்வாக குழுவுக்கு ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 2 உறுப்பினர்கள் இடங்களுக்கான பதவிக்கு இந்தியா, சீனா, சிங்கப்பூர், கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளிடையே கடும் போட்டி நிலவியது. இதில், இந்தியாவில் இருந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் பிரவீன் சின்கா தேர்வாகி உள்ளார். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதற்காக, பல்வேறு நாடுகளை தூதரக ரீதியாக இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டினர்.

மூலக்கதை