பளபளக்குமா இளமை பட்டாளம் * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு | நவம்பர் 24, 2021

தினமலர்  தினமலர்
பளபளக்குமா இளமை பட்டாளம் * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு | நவம்பர் 24, 2021

கான்பூர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று கான்பூரில் துவங்குகிறது. முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கைகொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று கான்பூரில் துவங்குகிறது. 

புதிய துவக்கம்

இந்திய அணிக்கு சுப்மன் கில், மயங்க் அகர்வால் என இளம் ஜோடி துவக்கத்தில் களமிறங்க உள்ளது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது இடத்தில் வரும் புஜாரா, 2019, ஜன. 3ல் சிட்னி டெஸ்டில் சதம் அடித்தார். இதன் பின் 1056 நாள் ஆகிவிட்டன. இன்னும் எழுச்சி பெறவில்லை. 

கேப்டன் ரகானேயும் ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கிறார். கடந்த 2019க்குப் பின் முதல் தர போட்டிகளில் பங்கேற்காத ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஜோடி அறிமுக வாய்ப்பு பெற காத்திருக்கிறது. ‘மிடில் ஆர்டரில்’ ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடி இவர்களுக்கு உள்ளது. விக்கெட் கீப்பராக சகா விளையாட உள்ளார். 

அஷ்வின் நம்பிக்கை

பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி இல்லாத நிலையில் ‘சீனியர்’ இஷாந்த் சர்மா (104 டெஸ்ட், 311 விக்.,), உமேஷ் யாதவ் (49ல், 154) என இருவரும் நம்பிக்கை தரவுள்ளதால், முகமது சிராஜ் இடம் பெறுவது சந்தேகம் தான். சுழற்பந்து வீச்சில் அனுபவ அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா கூட்டணி எதிரணிக்கு தொல்லையாக அமையலாம். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இங்கிலாந்துக்கு எதிராக சொந்தமண்ணில் நடந்த தொடரில் 27 விக்கெட் சாய்த்த அக்சர் படேல் வாய்ப்பு பெற உள்ளார். இதனால் ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, பரத் களமிறங்க மாட்டர். 

வில்லியம்சன் பலம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவை சாய்த்து கோப்பை வென்ற அணி நியூசிலாந்து. கேப்டன் வில்லியம்சன் தலைமையில் டாம் லதாம், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், பிளன்டல் என நியூசிலாந்து அணியின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. பந்துவீச்சில் ‘சீனியர்’ டிம் சவுத்தி, வாக்னர், ஜேமிசன் என ‘வேகக் கூட்டணி’ மிரட்ட காத்திருக்கிறது. 

சுழற்பந்துவீச்சில் அஜாஜ் படேல், சான்ட்னருடன் வில்லியம் சோமர்வில்லே என மூன்று பேர் பலம் காட்ட முயற்சிக்கலாம். 

 

நெருக்கடியில் ரகானே

பொதுவாக கேப்டன் என்றால் அந்த அணியில் அவரது இடத்துக்கு சிக்கல் இருக்காது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரகானேயின், சராசரி ரன்குவிப்பு கடைசி 11 டெஸ்டில் சராசரி 19.0 ஆக மட்டுமே உள்ளது. 

* தொடர்ந்து ஏமாற்றி வரும் ரகானே, நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டில் சாதிக்கவில்லை என்றால், தென் ஆப்ரிக்கா செல்லும் அணியில் இருந்து கழற்றி விடப்படலாம்.

* தவிர பயிற்சியிலும் ரகானே தடுமாறுகிறார். ஜெயந்த் யாதவ் சுழலில் போல்டான இவர், பிரசித் பந்தில் ‘கேட்ச்’ கொடுத்தார். ஷிவம் மாவி வீசிய ‘பவுன்சர்’ ரகானேயில் மார்பில் தாக்கியது. 

 

6 பேர் ‘ஆப்சென்ட்’

முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், முகமது ஷமி, பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் காயம் காரணமாக விலகினார். இதனால் முன்னணி வீரர்கள் 6 பேர் இல்லாமல் இந்தியா இன்று களமிறங்குகிறது. 

 

16

இந்திய மண்ணில் 1955 முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது நியூசிலாந்து. மொத்தம் பங்கேற்ற 34 டெஸ்டில் இந்தியா 16ல் வென்றது. 16 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 

* 1969, 1988 ல் என இரு டெஸ்டில் மட்டும் நியூசிலாந்து வென்றது. 

* இந்தியாவில் பங்கேற்ற 11 டெஸ்ட் தொடரில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. 

 

21

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை மோதிய 60 டெஸ்டில் இந்தியா 21, நியூசிலாந்து 13ல் வென்றன. 26 போட்டி ‘டிரா’ ஆகின.

* கான்பூரில் மோதிய 3 டெஸ்டில் இந்தியா 2ல் வென்றது. 1 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 

* கடந்த 1989க்குப் பின் இந்திய அணி இங்கு தோற்றது இல்லை. 

 

ஆடுகளம் எப்படி

கான்பூர் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கலாம். கடந்த 2016 டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக அஷ்வின் (10), ஜடேஜா (6) கூட்டணி 16 விக்கெட் கைப்பற்றியது. இன்று இரு அணிகள் தரப்பிலும் தலா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம். 

மூலக்கதை