உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட ஸ்கார்பியன் ரக ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு..!!

தினகரன்  தினகரன்
உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட ஸ்கார்பியன் ரக ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு..!!

மும்பை: இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்கார்பியன் வகையை சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பலை கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா - பிரான்ஸ் கூட்டணியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் வகையை சேர்ந்த கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய 3 நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்கார்பியன் ரகத்தை சேர்ந்த 4வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. மும்பை கடற்படை தளத்தில், கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முன்னிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் சென்சார் செயலிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரிய துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பலை கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கினார். இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பலின் இணைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம் நீர்மூழ்கி கப்பலை கட்டமைத்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் இணைத்ததன் மூலம், இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்ந்துள்ளது.

மூலக்கதை