சுப்மன், ஸ்ரேயாஸ் விளாசல் * இந்திய அணி ரன்குவிப்பு | நவம்பர் 25, 2021

தினமலர்  தினமலர்
சுப்மன், ஸ்ரேயாஸ் விளாசல் * இந்திய அணி ரன்குவிப்பு | நவம்பர் 25, 2021

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 258/4 ரன் குவித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ், ஜடேஜா அரைசதம் அடித்து கைகொடுத்தனர். 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் துவங்கியது. கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவிந்திரா அறிமுகம் ஆகினர். 

சுப்மன் அரைசதம்

இந்திய அணிக்கு சுப்மன் கில், மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. டிம் சவுத்தீ வீசிய போட்டியின் 5வது ஓவரில் இந்திய அணிக்காக முதல் பவுண்டரி அடித்தார் மயங்க் அகர்வால். அடுத்து ஜேமிசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 13 ரன்னுக்கு ஜேமிசனிடமே அவுட்டானார். 

புஜாரா, சுப்மன் கில் இணைந்தனர். அஜாஜ் படேல் ஓவரில் சுப்மன், தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அஜாஜ் படேல் பந்துகளை அவ்வப்போது பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன், டெஸ்ட் அரங்கில் 4வது அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன் எடுத்த நிலையில் சுப்மன் (52), ஜேமிசன் பந்தில் போல்டானார்.

ஜேமிசன் ஓவரில் புஜாரா, ரகானே தலா ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 36.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இந்நிலையில் புஜாரா (26), சவுத்தீ ‘வேகத்தில்’ வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரகானேவை 35 ரன்னில் போல்டாக்கி அனுப்பி வைத்தார் ஜேமிசன். இந்திய அணி 145 ரன்னுக்கு 4 விக்கெட் என திணறத் துவங்கியது. 

ஸ்ரேயாஸ் நம்பிக்கை

அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்த போதும், இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். ஜேமிசன் பந்தில் ஜடேஜா, ரச்சின் பந்தில் ஸ்ரேயாஸ் பவுண்டரி விளாசினர். அஜாஜ் படேல் வீசிய போட்டியில் 75வது ஓவரில் ஜடேஜா பவுண்டரி, ஸ்ரேயாஸ் சிக்சர் அடித்தனர். 

ஜேமிசன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த ஜடேஜா, 17 வது அரைசதம் எட்டினார். மறுபக்கம் ஸ்ரேயாஸ், சோமர்வில்லே பந்தை சிக்சருக்கு அனுப்பினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது. 5வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த ஸ்ரேயாஸ் (75), ஜடேஜா (50) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது. நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3, டிம் சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். 

மூலக்கதை