அதிகார ஆணவத்தை தகர்த்திய மக்கள் சக்தி!: வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டம் வெற்றிகரமாக நாளையுடன் ஓராண்டு நிறைவு..!!

தினகரன்  தினகரன்
அதிகார ஆணவத்தை தகர்த்திய மக்கள் சக்தி!: வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டம் வெற்றிகரமாக நாளையுடன் ஓராண்டு நிறைவு..!!

டெல்லி: வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் வெற்றிகரமாக நாளை ஓராண்டு நிறைவு செய்யவுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாகவும் மாறியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், டெல்லியை நோக்கி செல்வோம் என்ற முழக்கத்துடன் போராட்டத்தை தொடங்கினர். இவர்களுடன் ராஜஸ்தான், உத்திரப்பிரதேச விவசாயிகளும் இணைந்து போராடினர். இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த டிராக்டர் பேரணி, செங்கோட்டையை நோக்கிய போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து இடைவிடாமல் போராடி வந்தனர். போராட்டத்தில் தற்கொலை செய்தும், குளிராலும் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான ரத்து மசோதாவிற்கும் ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்ச ஆதரவிலையை உறுதி செய்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி நாளை நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டரில் பேரணியாக செல்லும் போராட்டம் குறித்து 27ம் தேதி ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்றதை போல் டெல்லியில் விவசாயிகளின் போராட்டமும் மிகப்பெரிய வெற்றியை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை