ஆன்டி இண்டியனை வெளியிட ஓடிடி நிறுவனங்கள் தயக்கம்

தினமலர்  தினமலர்
ஆன்டி இண்டியனை வெளியிட ஓடிடி நிறுவனங்கள் தயக்கம்

திரைப்படங்களை சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் புளூசட்டை மாறன் என்ற இளமாறன் இயக்கி உள்ள படம் ஆன்டி இண்டியன். இந்த படம் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை அவதூறு செய்கிறது என்று சென்னை தணிக்கை வாரியம் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர மறுத்தது. அதன் பிறகு படத்தை டிரிபியூனலுக்கு கொண்டு சென்று பல கட்டுகளுடன் சான்றிதழ் பெற்றார்கள். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது: இந்தப்படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.. இந்தப்படத்தால ஏற்கனவே லாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் சொல்லிருந்தேன். ஆனா அப்படி ஏதும் நடக்கலை. ஏன்னா இந்தப்படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு.

இந்தப்படத்தை வெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப்படத்தை வாங்க தயங்குனாங்க. அதனால ஒரு பக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம். இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப்படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம். இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்திருக்கிறோம் என்றார்.

நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக் கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல

இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. நிஜம் தான்.. அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார்.. நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க.. திட்டத்தான் செய்வாங்க.. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.. அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.. அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.

ஒரு படத்தை படமா பாருங்க.. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.. விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க.. நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது. படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.

மூலக்கதை