அரசின் அதிரடி தடை மசோதா 'கிடு கிடு'சரிவில் கிரிப்டோ கரன்சிகள்

தினமலர்  தினமலர்
அரசின் அதிரடி தடை மசோதா கிடு கிடுசரிவில் கிரிப்டோ கரன்சிகள்

புதுடில்லி:மத்திய அரசு, பெரும்பாலான தனியார் ‘கிரிப்டோகரன்சி’களை தடை செய்யும் விதமாக, ஒரு மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து, பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் விலை சரிவைக் கண்டன.
வரும் 29ம் தேதியன்று கூடவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணயங்களுக்கான ஒழுங்குமுறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உலகளவில் பிரபலமாகி வரும் ‘டிஜிட்டல் கரன்சி’யை இந்தியாவில் அறிமுகம் செய்யவும், அவற்றுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்த திட்டங்களும், இந்த மசோதா வாயிலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவில், அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, நேற்று உள்நாட்டு சந்தைகளில், முன்னணி கிரிப்டோகரன்சிகள் உட்பட பலவற்றின் விலை, வர்த்தகத்தின் துவக்கத்தில் 20 சதவீதம் வரை சரிவைக் கண்டன. குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி சந்தையான ‘வஸிர்எக்ஸ்’ சந்தையில் பலத்த சரிவு ஏற்பட்டது.
பல முதலீட்டாளர்கள் பயத்தில் தங்களிடமிருந்த கிரிப்டோகரன்சிகளை விற்கத் துவங்கினர். ரூபாய் மதிப்பில், ‘பிட்காய்ன்’ 17 சதவீதம் வரையிலும், ‘எத்தீரியம்’ 14 சதவீதம் வரையும், ‘டோஜ்காய்ன்’ 20 சதவீதம் வரையும், ‘போல்காடாட்’ 14 சதவீதம் வரையும் விலை சரிவைக் கண்டன. இருப்பினும் சர்வதேச சந்தைகளில் இவற்றின் விலை நிலையாகவே இருந்தன.
கிரிப்டோகரன்சியை பொறுத்தவரை, மத்திய அரசு, அனைத்து தனியார் நாணயங்களையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இருப்பினும், கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில் நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த, சில விதிவிலக்குகளையும் இந்த மசோதா அனுமதிக்கும்.இதில், தனியார் கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பது குறித்து சந்தையில் தெளிவற்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அரசாங்கத்தால் வெளியிடப்படாத மெய்நிகர் நாணயங்களையே தனியார் கிரிப்டோகரன்சி என மசோதாவில் குறிப்பிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘சிட்பண்டுகள்’ கதை தான்
ஒழுங்குபடுத்தப்படாத சிட்பண்டுகளில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டதை போலவே கிரிப்டோகரன்சிகளாலும் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போது, கிட்டத்தட்ட 6 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் வரை இருப்பதாகவும், எதிர்காலத்தில் இவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிடும் என்றும்; மிகச் சில காய்ன்கள் மட்டுமே உயிர்பிழைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்படி மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, பின் ஏமாற்றிவிடும் ஒழுங்குமுறைக்கு உட்படாத சிட்பண்டுகள் போலவே, பல கிரிப்டோகரன்சிகளும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை