தரமற்ற ஹெல்மெட், குக்கர்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை

தினமலர்  தினமலர்
தரமற்ற ஹெல்மெட், குக்கர்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை

புதுடில்லி:போலி தரச் சான்றிதழுடன் விற்கப்படும் இருசக்கர வாகனத்துக்கான ஹெல்மெட்டுகள், பிரஷர் குக்கர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சி.சி.பி.ஏ., தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ்., தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்தது குறித்து அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் பல்வேறு வணிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.சி.பி.ஏ.,வின் தலைமை ஆணையர் நிதி காரே கூறியதாவது:கடைகளில் மட்டுமின்றி மின்னணு வர்த்தக தளங்களிலும் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளோம். அதில் மூன்று பொருட்கள் ஹெல்மெட்டுகள், பிரஷர் குக்கர்கள், சிலிண்டர்கள் ஆகியவை, இந்திய தர நிர்ணய கழகத்தின் சான்றிதழ் பெறாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டுபிடித்துள்ளோம்.

இத்தகைய போலிப் பொருட்கள் விற்பனையை தடுக்க, நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், அவர்கள் பகுதியில் உள்ள நுகர்வோர் உரிமை மீறல் தொடர்பான புகார்களை விசாரித்து, அது குறித்த அறிக்கையை, அடுத்த இரு மாதங்களுக்குள்ளாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகர்வோரும், தரச் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களா என்பதை சோதித்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை