காலே டெஸ்ட்: மழையால் பாதிப்பு | நவம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
காலே டெஸ்ட்: மழையால் பாதிப்பு | நவம்பர் 23, 2021

காலே: இலங்கை, விண்டீஸ் அணிகள் மோதும் காலே டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. 

இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 386 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்து, 273 ரன் பின்தங்கி இருந்தது. மேயர்ஸ் (22), ஹோல்டர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மேயர்ஸ், ஹோல்டர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ரமேஷ் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார் மேயர்ஸ். தனஞ்செயா பந்தில் ஹோல்டர் சிக்சர் அடித்தார். 7வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது மேயர்ஸ் (45) அவுட்டானார். ஹோல்டர் 36 ரன்னுக்கு வெளியேறினார். 

கார்ன்வல், ஜோஷுவா இணைந்து, விண்டீஸ் அணியில் ‘பாலோ ஆனில்’ இருந்து மீட்டனர். ரமேஷ் வீசிய போட்டியின் 70 வது ஓவரில் மிரட்டிய கார்ன்வல், ஒரு சிக்சர், 2 பவுண்டரி என அடுத்தடுத்து விளாசினார். இவர் 39 ரன் எடுத்து அவுட்டானார். உணவு இடைவேளைக்குப் பின் விண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்து, 162 ரன் பின்தங்கி இருந்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்த மழை நீடிக்க, மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. 

ஜோஷுவா (11) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3, பிரவீன் ஜெயவிக்ரமா 3 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை