வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு * கிளம்பியது புது சர்ச்சை | நவம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு * கிளம்பியது புது சர்ச்சை | நவம்பர் 23, 2021

மும்பை: இந்திய வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது, ‘ஹலால்’ செய்யப்பட்ட உணவையே சாப்பிட வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து 6 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டுமென இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) விரும்புகிறது. உடலை ‘பிட்’ ஆக வைத்துக் கொள்ள சில உணவுகளை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாளை கான்பூரில் துவங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சாப்பிட வேண்டிய உணவு பட்டியல் வெளியானது. இதில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது, ‘ஹலால்’ முறையில் தயாரான உணவையே சாப்பிட வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இறைச்சிக்காக விலங்குகள் இரண்டு முறையில் கொல்லப்படுவது வழக்கம். ‘ஹலால்’ முறையில் விலங்கின் கழுத்து நரம்பு பகுதியில் வலி உணராதவாறு அறுப்பர். ரத்தம் முழுமையாக வெளியேற்றப்படும். ‘ஜட்கா’ முறையில் ஒரே வெட்டில் அறுத்துவிடுவர். தற்போது ‘ஹலால்’ முறையில் மட்டும் என கட்டுப்பாடு விதித்திருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் கவுரவ் கோயல் கூறுகையில்,‘‘வீரர்கள் விரும்பியதை சாப்பிட அனுமதிக்க வேண்டும். ‘ஹலால்’ உணவு முறையை அறிமுகம் செய்யும் உரிமையை பி.சி.சி.ஐ.,க்கு யார் கொடுத்தது. இது சட்டவிரோதமானது. ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,’’என்றார்.

முன்னாள் வீரர் ஒருவர் கூறுகையில்,‘மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை தவிர்க்க சொன்னதில்  வியப்பு இல்லை. நான் விளையாடிய காலத்தில் கூட இவ்வகை உணவு பரிமாறியது கிடையாது. மாடு, பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம். இதனால் மீன், சிக்கன் வகை உணவுகளை தான் சாப்பிட சொல்வர்,’’என்றார். 

இந்திய அணியை சேர்ந்த மருத்துவ குழுவினர் தான் வீரர்களுக்கான உணவு பட்டியலை தயாரித்துள்ளனர். இது பி.சி.சி.ஐ.,க்கு தெரிய வாய்ப்பு இல்லை. இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்க பி.சி.சி.ஐ., நிர்வாகிகளும் மறுத்துவிட்டனர்.

மூலக்கதை