சூர்யகுமார் ‘உள்ளே’...ராகுல் ‘வெளியே’ * நாளை டெஸ்ட் தொடர் துவக்கம் | நவம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
சூர்யகுமார் ‘உள்ளே’...ராகுல் ‘வெளியே’ * நாளை டெஸ்ட் தொடர் துவக்கம் | நவம்பர் 23, 2021

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் லோகேஷ் ராகுல். 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை கான்பூரில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் மும்பையில் டிச 3–7ல் நடக்கவுள்ளது. 

இதற்கான இந்திய அணியில் இடம் பெற்றவர் துவக்க வீரர் லோகேஷ் ராகுல். இடது தொடையின் தசைப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். காயத்தில் இருந்து மீண்டுவரத் தேவையான பயிற்சிகளில் ஈடுபட, ராகுல் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். 

துவக்கம் யார்

ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டது. கேப்டன் கோஹ்லி, ரிஷாப் பன்ட், முகமது ஷமி, பும்ரா ஓய்வில் இருப்பதால், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டர். தற்போது ராகுலும் விலகிய நிலையில் இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வந்தார் சூர்யகுமார்

ராகுலுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ் 31, டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றாலும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இம்முறை கோஹ்லி இல்லாத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருடன், ‘மிடில் ஆர்டரில்’ சூர்யகுமார் ஜோடி சேர காத்திருக்கிறார். 

முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி:

ரகானே (கேப்டன்), மயங்க் அகர்வால், புஜாரா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சகா, பரத், ஜடேஜா, அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. 


சராசரி எப்படி

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார். 2019–20 சீசனில் 10 இன்னிங்சில் 2 சதம், 2 அரைசதம் உட்பட 508 ரன் எடுத்தார். இதன் சராசரி 56.44 ஆக உள்ளது. 

* இந்திய ‘டி–20’ அணியில் தொடர்ந்து இடம் பெறும் சூர்யகுமார், 77 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

 

பயிற்சியில் கோஹ்லி

இந்திய டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் கோஹ்லி. கடைசியாக 2019, கோல்கட்டா பகலிரவு டெஸ்டில் சதம் அடித்தார். இதன் பின் சர்வதேச அரங்கில் 732 நாட்கள் ஆகிவிட்டன. மூன்றுவித கிரிக்கெட்டில் களமிறங்கிய 56 இன்னிங்சில் ஒரு சதமும் அடிக்கவில்லை. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இவருக்கு ஓய்வு தரப்பட்டது. இருப்பினும் நேற்று மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்துக்கு வந்த கோஹ்லி, பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

மூலக்கதை