ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு ஒப்புதல்

தினகரன்  தினகரன்
ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா வரும் 29ம் தேதி தொடங்க உள்ள குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 3 சட்டங்களையும் உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, விரைவில் உபி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக கடந்த வாரம் பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா கொண்டு வரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வரும் 29ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுடன் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது, லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியை பறிப்பது என 6 புதிய கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். அதே சமயம், வரும் 27ம் தேதி விவசாயிகள் கூட்டமைப்பு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தி எதிர்கால போராட்டங்கள் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதாகவும் கூறி உள்ளன. இதே போல, தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையு யூனியன் பிரதேசங்களில் மின்சாரம் விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கவும் ஒன்றிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மோடிக்கு ஜன.26 வரை கெடுவிவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்வதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், போராட்டத்தில் பலியான 750 விவசாயிகளின் குடும்பத்திற்கு நஷ்டஈடு உள்ளிட்ட எங்களின் பிற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் பூர்த்தி செய்தால், நாங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புவோம்’’ என கெடு விதித்துள்ளார்.இலவச உணவு தானிய திட்டம்; மேலும் 4 மாதத்திற்கு நீட்டிப்புகொரோனா பரவலைத் தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதன்படி, நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாடு முழுவடும் மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானிய திட்டம் மேலும் 4 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

மூலக்கதை