10 ஆயிரம் பேர் என்பது பொய்; குஜராத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் 3 லட்சம் பேர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
10 ஆயிரம் பேர் என்பது பொய்; குஜராத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் 3 லட்சம் பேர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘குஜராத்தில் கொரோனாவால் 3 லட்சம் பேர் இறந்துள்ளனர். நாட்டில் இந்த நோயால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கும் வரையில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்,’ என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இது குறித்து நேற்று வெளியிட்ட வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டிலேயே சிறந்ததாக குஜராத் மாடலை பாஜ முன்வைக்கின்றது. ஆனால் அங்கு இருக்கும் குடும்பங்கள் கொரோனா தொற்று காலத்தில் தங்களுக்கு மருத்துவமனையில் படுக்கையோ அல்லது வென்டிலேட்டரோ கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மருத்துவமனையில் அவர்களுக்கு உதவி வேண்டிய நேரத்தில் நீங்கள் அங்கு இல்லை. மருத்துவமனையில் ரூ.10-15 லட்சத்தை இழந்ததோடு  குடும்ப  உறுப்பினர்களையும் இழந்துள்ளனர். ஆனால், இப்போதும் இழப்பீடு வழங்குவதற்கு நீங்கள் அங்கு இல்லை. என்ன மாதிரியான அரசு இது?  குஜராத்தில் கொரோனாவால் 10 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக அந்த மாநில அரசு கூறுவது பொய். அங்கு 3 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பதுதான் உண்மை. இதனை அறிய காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி ரூ.8,500 கோடிக்கு புதிய விமானத்தை வாங்குகிறார். ஆனால், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசிடம் பணம் இல்லை. கொரேனாவால் குடும்பத்தில் ஒருவரை இழந்த ஏழை குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கும் வரை அரசுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  இதேபோல், ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த உண்மையான தரவுகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை