பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து 12,600 எதிரி சொத்துக்களை விற்று ரூ1 லட்சம் கோடி திரட்ட திட்டம்: பணியை முடுக்கியது ஒன்றிய அரசு

தினகரன்  தினகரன்
பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து 12,600 எதிரி சொத்துக்களை விற்று ரூ1 லட்சம் கோடி திரட்ட திட்டம்: பணியை முடுக்கியது ஒன்றிய அரசு

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து, 12,600 எதிரி சொத்துக்களை விற்று ரூ.1 லட்சம் கோடி திரட்டும் பணியை ஒன்றிய அரசு முடுக்கி விட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்த்து பல லட்சம் கோடி நிதியை ஒன்றிய அரசு திரட்டி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, இந்தியாவில் உள்ள எதிரி நாட்டு சொத்துக்களை விற்பதில் முனைப்பு காட்டி உள்ளது. இந்திய பிரிவினையின் போதும், 1962ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரின் போதும், இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தான், சீனாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொத்துக்களை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர். அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் 12,485 சொத்துக்களும், சீனாவைச் சேர்ந்தவர்களின் 126 சொத்துக்களும் கேட்பாரின்றி கிடப்பது அடையாளம் காணப்பட்டுள்ளன.அதிகபட்சமாக உபி.யில் 6,255 சொத்துக்களும், மேற்கு வங்கத்தில் 4,088, டெல்லியில் 658, கோவாவில் 295, மகாராஷ்டிராவில் 207, தெலங்கானாவில் 158, குஜராத்தில் 151, திரிபுராவில் 105 மற்றும் பீகாரில் 94 சொத்துக்களும் உள்ளன. இவற்றை விற்றால் ஒன்றிய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும். இதற்கு முன் எதிரிகளின் அசையும் சொத்துக்கள் விற்ற வகையில் ரூ.2,700 கோடி அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த அசையா சொத்துக்களும் விற்கப்படவில்லை. தற்போது அசையா சொத்துக்களை விற்று ரூ.1 லட்சம்  கோடி திரட்டும் பணியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. இதற்கான குழு சீரமைக்கப்பட்டு, அதிகாரிகள் மாற்றப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த குழு எந்த சொத்துக்களை விற்கலாம், எதை ஒன்றிய அரசின் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆய்வு செய்து அரசுக்கு பரிசீலிக்கும்.

மூலக்கதை