தோல்வியின் பிடியில் வெஸ்ட் இண்டீஸ்: ரமேஷ் மெண்டிஸ் அபார பந்துவீச்சு

தினகரன்  தினகரன்
தோல்வியின் பிடியில் வெஸ்ட் இண்டீஸ்: ரமேஷ் மெண்டிஸ் அபார பந்துவீச்சு

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில், 18 ரன்னுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன் குவித்தது. கேப்டன் கருணரத்னே அதிகபட்சமாக 147 ரன் (300 பந்து, 15 பவுண்டரி) விளாசினார். நிஸங்கா 56, டி சில்வா 61, சண்டிமால் 45 ரன் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்தது.நேற்று அந்த அணி 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோஷுவா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் பிரவீன் 4, ரமேஷ் 3, லக்மல், எம்புல்டெனியா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 156 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. கருணரத்னே 83 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் 69* ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கார்ன்வால், வாரிகன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 11.4 ஓவரில் 18 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. என்க்ருமா போனர் - ஜோஷுவா டா சில்வா ஜோடி 7வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராட, வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்துள்ளது. போனர் 18 ரன், ஜோஷுவா 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் எம்புல்டெனியா 2, ரமேஷ் 4 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, வெஸ்ட் இண்டீசுக்கு இன்னும் 296 ரன் தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை