கர்நாடகாவில் அரசு துறையில் பேயாட்டம் போடும் லஞ்சம்: அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் ரெய்டு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் அரசு துறையில் பேயாட்டம் போடும் லஞ்சம்: அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் ரெய்டு

* பைப்பில் ரூ44 லட்சத்தை பதுக்கிய கில்லாடி* ஒருவரிடம் மட்டுமே ரூ100 கோடி சிக்கியதுபெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த 15 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு அலுவலகம் உள்பட 68 இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், குழாயில் பதுக்கிய ரூ44 லட்சமும், பல கோடி  மதிப்பிலான தங்க கட்டிகள், ரொக்கப்பணம், சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கர்நாடகத்தில் அரசு பணிகளை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து அதிகளவு லஞ்சம் பெற்று கொண்டு அதிகாரிகள், பணிகளை செய்து கொடுத்து வருகின்றனர். அவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும்போது, ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை கைது செய்து, நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், ஒரே நேரத்தில் பலரின் வீடுகளில் நடவடிக்கை எடுப்பது கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்டது. ஆனால், ஊழல் தடுப்பு படைக்கும் முன்னதாக லோக் ஆயுக்தா பிரிவு அமலில் இருந்தபோதும், பலர் வீடுகளில் சோதனை நடத்தி கோடி கணக்கில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்தனர். லஞ்ச வழக்குகள் தொடர்பான விசாரணை எப்போது ஊழல் தடுப்பு படைக்கு மாற்றப்பட்டதோ, அதில் இருந்து சிறிய அளவிலேயே நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவு ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கினர். கர்நாடகத்தில் வெவ்வேறு துறையில் பணியாற்றி வரும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 68 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். கலபுர்கி மாவட்டம், ஜேவர்கி தாலுகாவில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஜூனியர் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சாந்த கவுடா எஸ்.எம் பிராதார். இவர் பொதுப்பணித்துறையில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று சொத்துகளை வாங்கில பினாமி பெயர்களில் சொத்துகளாக வாங்கி குவித்திருந்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த முறையான ஆதாரங்களின் பேரில் சாந்த கவுடாவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் 40க்கும் அதிகமான ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இவரது வீட்டில் இருந்த தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் சொற்ப அளவே சிக்சியது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக வீட்டிற்கு வெளியே இருந்த பிளாஸ்டிக் பைப்புகளில் சோதனை செய்யப்பட்டது. அதில், சுவருடன் இணைக்கப்பட்டிருந்த பைப்பில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. பிளம்பரை வரவழைத்த அதிகாரிகள் ரூ44 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சொத்துக்கள், நிலங்கள், வீட்டு மனை, வாகனங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர். இதே போல்,  பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த மோட்டார் வாகன சீனியர் ஆய்வாளர் சதாசிவா மரலிங்கனவரிடம் இருந்து வீடுகள், நிலங்கள் 1. 135 கிலோ தங்க நகைகள், ரூ8.22 லட்சம் ரொக்கப்பணம், வெள்ளி நகைகள், கார், பைக், சொத்துகள், வீடுகள், நிலங்கள், பிளாட்டுகள் என பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்கள் சிக்கின. இதே மாவட்டத்தில் பைலஹொங்கலா நகரத்தை சேர்ந்த நேதாஜி  ஹிராஜ் பாட்டீல். இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், பண்ணை வீடு என 3 இடங்களில் 30க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஏராளமான பணம். நகைகள், கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் சிக்கின. கதக் மாவட்ட வேளாண் துறையில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த டி.எஸ் ருத்திரேஷிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 5 இடங்களில் 44 ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 55 தங்க கட்டிகள், 15 தங்க நெக்லஸ், 10 வைர மோதிரங்கள், தங்க செயின்கள், வளையல்கள், தங்க மோதிரங்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ100 கோடி.  சோதனை நடத்தப்பட்ட 15 அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளர். பல கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் சிக்கி உள்ளதால், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனை, கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கழிவறை பைப், பைக், பேனில் பணம்பொதுப்பணித் துறை ஜூனியர் செயற்பொறியாளர் சாந்தகவுடா எஸ்.எம் பிராதர், பணத்தை பதுக்கி வைக்க புதுப்புது வித்தைகளை கையாண்டு இருந்தார். வீட்டில் பணம் எதுவும் கிடைக்காததால் சந்கேதம்  அடைந்த  லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், சினிமாவில் வருவது போல் யோசித்தனர். மொட்டை மாடியில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக அமைக்கக்பட்டுள்ள குழாய், கழிவறையில்  இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய்களை தட்டி பார்த்தபோது அதன் சத்தம் வித்தியாசமாக இருந்தது. உடனே பிளம்பரை வரவழைத்த அதிகாரிகள், ஒவ்வொரு குழாயை உடைத்து பார்த்தபோது, ரூ500  மற்றும் ரூ2000 நோட்டுகள் என சுமார் ரூ44 லட்சம் சிக்கியது. இதேபோல் வீட்டில் உள்ள மின் விசிறியை ஆன்  செய்தபோது, அது சுற்றவில்லை. எலக்ட்ரீசியனை அழைத்து கழற்றி பார்த்தபோது,  அதிலும் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக்கிலும் பணம் சிக்கியது.408 அதிகாரிகள்* இந்த சோதனையில் 408 லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். * அதிகாலை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தபோதே கதவை தட்டி அதிரடியாக நுழைந்த இவர்கள் சோதனையை தொடங்கினர்.

மூலக்கதை