‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ்

தினகரன்  தினகரன்
‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ்

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், கடுமையாகப் போராடிய வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன் நெருக்கடியை தவிர்த்தது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 133.5 ஓவரில் 386 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே அதிகபட்சமாக 147 ரன் (300 பந்து, 15 பவுண்டரி) விளாசினார். நிஸங்கா 56, டி சில்வா 61, சண்டிமால் 45 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜோமெல் வாரிகன் 3, கேப்ரியல் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்தது. கைல் மேயர்ஸ் 22 ரன், ஜேசன் ஹோல்டர் 1 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. மேயர்ஸ் 45 ரன் எடுத்து டி சில்வா பந்துவீச்சில் கருணரத்னே வசம் பிடிபட்டார். ஹோல்டர் 36 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஜோஷுவா டா சில்வா - ரகீம் கார்ன்வால் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்ததுடன், பாலோ ஆன் நெருக்கடியையும் தவிர்த்தனர். கார்ன்வால் 39 ரன் (58 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி லக்மல் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் வசம் பிடிபட்டார். வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்த நிலையில், கனமழை காரணமாக 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோஷுவா 11 ரன்னுடன் களத்தில் உள்ளார். இலங்கை பந்துவீச்சில் பிரவீன், ரமேஷ் தலா 3 விக்கெட், லக்மல், எம்புல்டெனியா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 1 விக்கெட் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 162 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை