மருத்துவ உலகில் புதிய நம்பிக்கை ஒளி மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை தானாக குணமான எய்ட்ஸ் நோயாளி: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

தினகரன்  தினகரன்
மருத்துவ உலகில் புதிய நம்பிக்கை ஒளி மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை தானாக குணமான எய்ட்ஸ் நோயாளி: ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: அர்ஜென்டினாவில் உள்ள எஸ்பரென்சா நகரத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கடந்த 2013ல் எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இவருடைய கணவர், கடந்த 2017ல் இதே  நோயால் இறந்தார். இந்த பெண்ணும் எய்ட்சுக்கு வீரயமிக்க மருந்துகளை சாப்பிட்டு வந்தார். ஆனால், மாத்திரையின் வீரியம் பிடிக்காமல், அதை சாப்பிடுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார். சில ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் சாதாரணமாகவே இருந்தார். எய்ட்ஸ் நோய்க்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. சமீபத்தில் அவரை பரிசோதித்தபோது, ஒரே ஆச்சர்யம். அவருடைய உடலில் எய்ட்ஸ் கிருமி சுத்தமாக இல்லை. வழக்கமாக, எய்ட்சுக்கு மருந்து சாப்பிட்டால், அந்த நோய்க்கிருமி வைரஸ் கட்டுக்குள் இருக்கும். பல்கிப் பெருகி நோயின் தீவிரத்தை அதிகரிக்காது. ஆனால், மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விட்டால், அடங்கி கிடக்கும் இந்த கிருமி மீண்டும் உயிர் பெற்று தாக்கத் தொடங்கும். ஆனால், இந்த பெண்ணின் உடலில் அந்த கிருமி மரபணு, ரத்த அணுக்கள், திசுக்கள் உட்பட எந்த இடத்திலும் முற்றிலும் தென்படவில்லை.  அவர் நிரந்தரமாக குணமாகி இருப்பது ,  மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.‘இது, எப்படி சாத்தியமானது என்பது புதிராகவே உள்ளது. இவரை போலவே 2 எய்ட்ஸ் நோயாளிகளும் முழுமையாக குணமாகி இருக்கின்றனர். ஆனால், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு மூல செல் மாற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால், எய்ட்சில் இருந்து  அவர்கள் முற்றிலும் குணமாகி இருக்கின்றனர். ஆனால், அது போன்ற எந்த சிகிச்சையும், தொடர் மருந்தும் இல்லாமல், இந்த பெண் குணமாகி இருப்பதற்கான பதில், மருத்துவர்களிடம் இல்லை. இதன்மூலம் எய்ட்ஸ் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்துவதற்கான ஒரு நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளது,’ என்கிறார் பியூனஸ் ஏரிசில் உள்ள உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஷு யூ.* உலகில் முதன் முதலாக 1981, ஜூலை 5ம் தேதி தான் அமெரிக்காவின், கலிபோர்னியா நகரத்தில் ஒருவருக்கு எய்ட்ஸ் கண்டறியப்பட்டது.* அப்போது முதல் கடந்த 40 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 8 கோடி பேர் இந்த நோயால் பாதித்துள்ளனர். அவர்களில் 3 கோடியே 63 லட்சம் பேர் இறந்துள்ளனர்.* கடந்த 2020ம் ஆண்டு நிலவரப்படி, தற்போது உலகளவில் 3 கோடியே 77 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.* கடந்த 20 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதை 2030ம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிக்க, உலக நாடுகள் உறுதி பூண்டுள்ளன.* உலகளவில் ஆண்டுதோறும் எய்ட்சால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1997ல்  30 லட்சமாக இருந்தது. 2020ம் ஆண்டில் இது, 15 லட்சமாக குறைந்துள்ளது.

மூலக்கதை