பாக்., ‘ஹாட்ரிக்’ வெற்றி * வங்கதேச அணி ஏமாற்றம் | நவம்பர் 22, 2021

தினமலர்  தினமலர்
பாக்., ‘ஹாட்ரிக்’ வெற்றி * வங்கதேச அணி ஏமாற்றம் | நவம்பர் 22, 2021

தாகா: வங்கதேச அணிக்கு எதிரான ‘டி–20’ போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பை கைப்பற்றியது. 

வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதிய மூன்றாவது, கடைசி போட்டி தாகாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

நயிம் ஆறுதல்

வங்கதேச அணிக்கு முகமது நயீம், ஷான்டோ (5) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஷமிம் (22), ஆபிப் (20), கேப்டன் மகமதுல்லா (13) சற்று கைகொடுக்க, நயீம் அதிகபட்சம் 47 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்தது. 

ஹைதர் அபாரம்

எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (40), கேப்டன் பாபர் ஆசம் (19) ஜோடி துவக்கம் தந்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டன. மகமதுல்லா வீசிய இந்த ஓவரில் முதல் 3 பந்தில் சர்பராஸ் அகமது (6), ஹைதர் அலி(45) அவுட்டாகினர். 4வது பந்தில் சிக்சர் அடித்த இப்திகார் (6), அடுத்த பந்தில் அவுட்டானார். 

கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் நவாஸ் பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 127/5 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. நவாஸ் (4) அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ந்து 3 போட்டிகளில் அசத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் பாகிஸ்தான் கோப்பை வென்றது. 

மூலக்கதை