பாக்., செல்லுமா இந்தியா * என்ன சொல்கிறது ஐ.சி.சி., | நவம்பர் 22, 2021

தினமலர்  தினமலர்
பாக்., செல்லுமா இந்தியா * என்ன சொல்கிறது ஐ.சி.சி., | நவம்பர் 22, 2021

துபாய்: ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்வது சவாலான விஷயம்,’’ என ஐ.சி.சி., தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்தார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2024–2031ல் உலக கோப்பை உட்பட பல முக்கிய தொடர்களை நடத்தும் நாடுகளின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 2026ல் ‘டி–20’ உலக கோப்பை (இலங்கையுடன் சேர்ந்து), 2031ல் 50 ஓவர் உலக கோப்பை (வங்கதேசத்துடன் சேர்ந்து), 2029ல் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐ.சி.சி., தொடர்கள் நடக்க உள்ளன. 

1996 உலக கோப்பை தொடருக்குப் பின், பாகிஸ்தானில் 2025ல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளது. ஆனால் 2009ல் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது நடந்த தாக்குதலுக்குப் பின் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல அணிகள் அங்கு செல்லவில்லை. தவிர 2008 மும்பை தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் உறவில் பாதிப்பு ஏற்பட, இந்தியா அங்கு செல்லவில்லை. 

இதுகுறித்து ஐ.சி.சி., தலைவர் கிரெக் பார்கிளே கூறியது:

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா அணி, பாகிஸ்தான் செல்வது என்பது சவாலான விஷயம். இது எங்களுக்குத் தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் புவி சார்ந்த அரசியல் பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியாது. இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்த கிரிக்கெட் ஒரு பாலமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

தேசங்களை ஒருங்கிணைக்க விளையாட்டினால் முடியும். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதற்கு கைகொடுக்குமானால் சிறப்பாக இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை