பாலோ ஆன் தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் திணறல்

தினகரன்  தினகரன்
பாலோ ஆன் தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் திணறல்

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், பாலோ ஆன் நெருக்கடியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் திணறி வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 132 ரன், தனஞ்ஜெயா டி சில்வா 56 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டி சில்வா 61 ரன் (95 பந்து, 5 பவுண்டரி), கருணரத்னே 147 ரன்னில் (300 பந்து, 15 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களில் தினேஷ் சண்டிமால் 45 ரன் எடுக்க (83 பந்து, 5 பவுண்டரி), மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 133.5 ஓவரில் 386 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஜெயவிக்ரமா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 28.5 ஓவரில் 3 மெய்டன் உள்பட 83 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஜோமெல் வாரிகன் 3, கேப்ரியல் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து திணறி வருகிறது. கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் 41, பிளாக்வுட் 20 ரன் எடுக்க... போனர் (1), ஹோப் (10), சேஸ் (2), வாரிகன் (1) ஏமாற்றமளித்தனர். கைல் மேயர்ஸ் 22 ரன், ஜேசன் ஹோல்டர் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 3, ஜெயவிக்ரமா 2, எம்புல்டெனியா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் மட்டுமே இருக்க, வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆன் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

மூலக்கதை